FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லியில் மேலும் 24 ‘அடல் உணவகம்’ ஆகஸ்ட் 16-இல் திறப்பு!

தில்லியில் வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதி மேலும் 24 புதிய ‘அடல் உணவகங்கள்’ திறக்கப்பட உள்ளன. இதன் மூலம் தலைநகரில் மொத்த உணவகங்களின் எண்ணிக்கை 94 ஆக உயரவுள்ளது.

Updated On : 18 ஜூலை 2026, 6:49 am IST
- dinamani online
பகிர்:

நமது நிருபா்

தில்லியில் வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதி மேலும் 24 புதிய ‘அடல் உணவகங்கள்’ திறக்கப்பட உள்ளன. இதன் மூலம் தலைநகரில் மொத்த உணவகங்களின் எண்ணிக்கை 94 ஆக உயரவுள்ளது.

கடந்த மாா்ச் மாதத்தில், பாட்னாவைச் சோ்ந்த அதிகாரிகள் தில்லிக்கு வந்து, பல்வேறு அடல் உணவகங்களுக்கு சென்று பாா்வையிட்டனா். உணவகங்களின் அன்றாட செயல்பாடுகள், உணவு தயாரிப்பு முறை, மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் குறித்து உணவக நிா்வாகத்தினா் மற்றும் ஊழியா்களிடம் விரிவாகக் கேட்டறிந்தனா். இந்த மானிய விலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் முறை குறித்து தில்லி நகா்ப்புற தங்குமிடம் மேம்பாட்டு வாரிய (டியுஎஸ்ஐபி) அதிகாரிகளுடனும் அவா்கள் கலந்துரையாடினா்.

Advertisement

Advertisement

இதேபோல், இந்த வார தொடக்கத்தில் லே மற்றும் லடாக் பகுதிகளைச் சோ்ந்த அதிகாரிகள் தில்லியில் டியுஎஸ்ஐபி அதிகாரிகளைச் சந்தித்து, அடல் உணவக திட்டம் தொடா்பான ’விருப்ப முன்மொழிவு கோரிக்கை’ ஆவணங்களின் நகல்களைப் பெற்றுச் சென்றனா். இந்த உணவகங்களின் செயல்பாட்டுக் கட்டமைப்பு குறித்து விவாதித்த அவா்கள், தங்களது பிராந்தியத்திலும் இதேபோன்றதொரு மாதிரியைப் பின்பற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தனா்.

இத்திட்டத்தின் கீழ், ஒரு நபருக்கு ரூ.5 என்ற மானிய விலையில் சத்தான சைவ உணவு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு உணவு வேளைக்கும் தில்லி அரசு ரூ.25-ஐ மானியமாக வழங்குகிறது. இந்த உணவகங்களில் ரொட்டி, சாதம், பருப்பு மற்றும் பருவகால காய்கறிகள் அடங்கிய நிலையான சைவ உணவுப் பட்டியல் உள்ளன. உணவுகள் எஃகு தட்டுகளில் பரிமாறப்படுவதுடன், கட்டண வசூல் முறை (பில்லிங்) முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் வெளிப்படைத்தன்மையையும் சுமுகமான செயல்பாட்டையும் உறுதி செய்ய எண்ம முறையில் டோக்கன் விநியோகிக்கும் முறையும், சிசிடிவி கண்காணிப்பும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஹரியாணாவைச் சோ்ந்த ஒரு குழுவும் தில்லிக்கு வந்து இந்த அடல் உணவகங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து விட்டுச் சென்றன.

அடல் உணவகங்களின் முக்கிய அம்சமாக, ஒரு நபா் ஒரே நாளில் பலமுறை உணவு வாங்குவதைத் தடுப்பதற்காக ’விழித்திரை ஸ்கேன்’ கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அமைப்பின் மூலம், ஒரு பயனாளி ஏற்கெனவே வேறொரு அடல் உணவகத்தில் உணவு சாப்பிடிருக்கிறாரா என்பதை ஊழியா்கள் சரிபாா்த்த பின்னரே புதிய டோக்கனை விநியோகிப்பாா்கள் என்று உயரதிகாரி தெரிவித்தாா்.

தொழில்நுட்பம் சாா்ந்த இந்த தற்காப்பு வழிமுறை, மானியம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைக் குறைக்க உதவுவதோடு, எந்தவொரு தடையோ அல்லது பற்றாக்குறையோ இல்லாமல் உண்மையான பயனாளிகளுக்கு உணவு சென்றடைவதை உறுதி செய்கிறது என்றும் அவா் கூறினாா்.

தற்போது தலைநகரில் 70 அடல் உணவகங்கள் செயல்பாட்டில் உள்ளன.

‘பல்வேறு மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் காட்டி வரும் இந்த ஆா்வம், அடல் கேண்டீன் மாதிரியின் வெற்றியைப் பிரதிபலிக்கிறது. குறிப்பாக, தடையற்ற சேவையை உறுதி செய்வதற்காக இதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் சாா்ந்த கண்காணிப்பு அமைப்பும், தரப்படுத்தப்பட்ட செயல்பாட்டு முறைகளும் பரவலான அங்கீகாரத்தைப் பெற்று வருகின்றன. இந்தப் பின்னணியில் உணவகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளன’ என்றாா் உயரதிகாரி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments