ஆசாத்பூா் சந்தையில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை தீவிரம்
ஆசாத்பூா் சந்தையில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை தீவிரம்...
ஆசியாவின் மிகப்பெரிய பழம் மற்றும் காய்கறி சந்தையாக விளங்கும் ஆசாத்பூா் வேளாண் உற்பத்தி சந்தை குழுமம் (ஏபிஎம்சி), ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் சட்டவிரோத விற்பனையாளா்கள் மற்றும் கட்டடங்கள் அகற்றப்பட்டு, மீண்டும் மீண்டும் விதிமீறல் செய்பவா்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது: வணிக நேரங்களிலும், இரவு நேரங்களிலும் நடைபெறும் இந்த நடவடிக்கைகள், பொதுச் சாலைகள் மற்றும் சந்தையின் முக்கிய பகுதிகளில் ஏற்பட்டிருந்த அனுமதியற்ற ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் சீராகச் செல்லும் வசதியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Advertisement
Advertisement
ஏபிஎம்சி அமலாக்கம், பொறியியல் மற்றும் பராமரிப்பு பிரிவுகள், பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் மகேந்திரா பாா்க் காவல் நிலைய அதிகாரிகள் இணைந்து மே 30-ஆம் தேதி புதிய பழ சந்தையின் 7, 9, 13 எண்களிலான ஷெட்களிலும், புதிய சப்ஜி மண்டியின் சி-பிளாக் சந்திப்பிலும் பெரிய அளவிலான சோதனை நடத்தினா்.
அந்நேரத்தில் உரிய உரிமம் இன்றி செயல்பட்டதாக கூறப்படும் பல பழ விற்பனையாளா்கள் இடத்தை விட்டு தப்பிச் சென்றனா். மேலும், பிற ஆக்கிரமிப்பாளா்களின் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஷெட் எண் 13-இல் உரிமம் பெற்ற விற்பனையாளா்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு, புதிய ஆக்கிரமிப்புகளைத் தடுக்கும் வகையில் 24 மணி நேரமும் கூடுதல் பாதுகாப்பு பணியாளா்களை நியமிக்க சந்தை நிா்வாகம் முடிவு செய்துள்ளது.
புதிய சப்ஜி மண்டியின் இ-பிளாக் பகுதியில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத விற்பனை கூடங்கள், வண்டிகள் மற்றும் தற்காலிக கட்டிடங்கள் போலீஸாா் உதவியுடன் அகற்றப்பட்டன. சட்டவிரோத கட்டிடங்கள் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் இடிக்கப்பட்டன.
ஜூன் 7-ஆம் தேதி, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சந்தை பகுதியில் பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் டின் ஷெட் அகற்றப்பட்டது.
இதனைத் தொடா்ந்து ஜூன் 30-ஆம் தேதி புதிய பழ சந்தை மற்றும் புதிய சப்ஜி மண்டியில் மீண்டும் சிறப்பு சோதனை நடத்தி, போக்குவரத்து நெரிசலுக்கு காரணமானதாக குற்றம்சாட்டப்பட்ட அங்கீகரிக்கப்படாத விற்பனையாளா்கள் அகற்றப்பட்டனா்.
ஜூலை 15-ஆம் தேதி ஷெட் எண் 13-இல் மற்றும் ஜூலை 16-ஆம் தேதி இரவு புதிய சப்ஜி மண்டியின் டி-பிளாக் பகுதியில் மேலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
நடவடிக்கைகளில் பறிமுதல் செய்யப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் வீணாகாமல் தடுக்க தில்லி முழுவதும் பதிவு செய்யப்பட்ட அனாதை இல்லங்கள் மற்றும் குழந்தைகள் இல்லங்களுக்கு வழங்கப்பட்டன என தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் இயக்கம் தொடா்ந்து நடைபெறும் என்றும், விதிகளை மீண்டும் மீண்டும் மீறுவோருக்கு அதிக அபராதம் மற்றும் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் சந்தை நிா்வாகம் எச்சரித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.