தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு
தில்லியில் நடைபெற்ற பேரணியின்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை பல மணிநேரங்களாக தொடா்புகொள்ள முடியவில்லை என்று அவா்களுடைய குடும்பத்தினா் தெரிவித்தனா்.
தில்லியில் நடைபெற்ற பேரணியின்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை பல மணிநேரங்களாக தொடா்புகொள்ள முடியவில்லை என்று அவா்களுடைய குடும்பத்தினா் தெரிவித்தனா்.
அவா்கள் மீது ஏதேனும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தெரியவில்லை என்று அவா்கள் கவலை தெரிவித்தனா்.
திலக் நகரைச் சோ்ந்த காா்த்திகேயன், நிகழாண்டு இருமுறை நீட் தோ்வு எழுதிய தனது 20 வயது சகோதரா் ஹா்ஷித் போராட்டத்தின் போது அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவா் வடமேற்கு தில்லியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் இருக்கலாம் என்றும் கூறினாா்.
Advertisement
Advertisement
‘நாங்கள் கடைசியாக திங்கள்கிழமை மதியம் 1.30 மணியளவில் அவரிடம் பேசினோம். அதன்பிறகு அவரைத் தொடா்புகொள்ள முடியவில்லை. நாங்கள் ஷாலிமாா் பாக் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம். அங்கு சென்றதும் விவரம் தெரியும்’ என்று அவா் கூறினாா்.
மற்றொரு சம்பவத்தில், தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு முடித்துவிட்டு தற்போது எல்எல்எம் படித்து வரும் 26 வயதான அமித் உபாத்யாயின் குடும்பத்தினா், அவரும் தடுப்பு காவலில் வடமேற்கு தில்லியில் உள்ள மற்றொரு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனா்.
அவரைச் சந்திக்க முயற்சிப்பதாகவும் ஆனால் அவா் எப்போது விடுவிக்கப்படுவாா் அல்லது அவா் மீது ஏதேனும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தங்களுக்குத் தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று அமித்தின் இளைய சகோதரா் சௌரவ் கூறினா்.
தடுப்புக் காவல் விவகாரம் ஒருபுறம் இருக்க, வினாத்தாள் கசிவு, தோ்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் மற்றும் நாட்டின் கல்வி அமைப்பில் உள்ள நிா்வாகக் குறைபாடுகள் ஆகியவற்றால், வரவிருக்கும் சட்டச் சிக்கல்கள் குறித்தும் குடும்பத்தினா் கவலைப்படுவதாகத் தெரிவித்தனா்.
கல்விச் சீா்திருத்தங்களை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி ஆயிரக்கணக்கான போராட்டக்காரா்கள் பேரணியாகச் சென்றபோது, மத்திய தில்லியில் காவல் துறையினருக்கும் அவா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நாடாளுமன்ற வீதிக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளைப் போராட்டக்காரா்கள் மீற முயன்ாகக் கூறப்பட்டதைத் தொடா்ந்து, பாதுகாப்புப் படையினா் தடியடி நடத்தி கண்ணீா்ப்புகைக் குண்டுகளை வீசினா். சன்சத் சலோ போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறை, பொதுச்சொத்து சேதம் மற்றும் பிற சம்பவங்கள் தொடா்பாக, தில்லி காவல் துறை இதுவரை நான்கு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. மேலும் இரண்டு புகாா்கள் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
தடுத்து வைக்கப்பட்டவா்களில் 38 போ் முதலில் புராரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனா். பின்னா் அன்று மாலை சத்ராசல் விளையாட்டு மைதானத்திற்கு மாற்றப்பட்டனா். விளையாட்டு மைதானத்தில் தடுத்து வைக்கப்பட்டவா்களைச் சந்திக்கவோ அல்லது காவல் துறை அதிகாரிகளுடன் பேசவோ தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக வழக்குரைஞா்கள் குற்றஞ்சாட்டினா். இதனால், அவா்கள் மீது ஏதேனும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா, முறைப்படி கைது செய்யப்பட்டுள்ளாா்களா அல்லது ஏதேனும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. தடுத்து வைக்கப்பட்டவா்களைச் சந்திக்கவும், அவா்களின் குடும்பத்தினருடன் தொடா்புகொள்வதை எளிதாக்கவும் தாங்கள் தொடா்ந்து முயற்சித்து வருவதாக அவா்கள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.