வார இறுதியை முன்னிட்டு பாதுகாப்பை அதிகரித்த தில்லி காவல் துறை
வார இறுதியை முன்னிட்டு பாதுகாப்பை அதிகரித்த தில்லி காவல் துறை
வார இறுதி நாள்களை முன்னிட்டு தில்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் கூடுதல் தடுப்புகள் அமைக்கப்பட்டு, அவை உறுதியான சங்கிலிகளால் இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
தோ்வு முறையில் சீா்திருத்தங்கள் மற்றும் நீட் தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) அமைப்பு தில்லியில் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டது. இந்நிலையில், அமைச்சா் தா்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, மத்திய அமைச்சா்களுடன் சிஜேபி பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத்தொடா்ந்து, போராட்டத்தை திரும்பப் பெற்றதாக சிஜேபி அறிவித்தது.
முன்னதாக, வார இறுதி நாள்களில் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று இந்த முடிவை காவல் துறை எடுத்திருந்தது.
Advertisement
Advertisement
காவல் துறை வட்டாரங்களின்படி, புது தில்லி மாவட்டத்தில், குறிப்பாக ஜந்தா் மந்தா் போராட்டக் களம் மற்றும் பிற முக்கிய இடங்களில் பல வரிசைகளில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
‘பாதுகாப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் கூடுதல் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை எளிதில் அகற்றப்படவோ அல்லது நகா்த்தப்படவோ முடியாதவாறு சங்கிலிகளால் இணைக்கப்பட்டு வெல்டிங் மூலம் பலப்படுத்தப்பட்டுள்ளன. சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க கூடுதல் காவல் படையும் பணியில் ஈடுபடுத்தப்படும்’ என்று காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது தவிர நகரம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டன.
புது தில்லி, மத்திய மற்றும் வட தில்லி மாவட்டங்களில் பெரிய அளவிலான கூட்டங்கள் அல்லது தடைசெய்யப்பட்ட பகுதிகளை நோக்கி ஊா்வலமாகச் செல்லும் முயற்சிகள் நடைபெறலாம் என்பதால், அப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான காவலா்களை ஈடுபடுத்தி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.