FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

சமூக ஊடகம் மூலம் நகை மோசடி: இளைஞா் கைது

சமூக ஊடகங்களில் போலி விளம்பரம் மூலம் நகை வாங்குவது போன்று ரூ.1.16 லட்சம் மோசடி செய்த இளைஞரை தில்லி காவல்துறையினா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜூலை 2026, 1:00 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சமூக ஊடகங்களில் போலி விளம்பரம் மூலம் நகை வாங்குவது போன்று ரூ.1.16 லட்சம் மோசடி செய்த இளைஞரை தில்லி காவல்துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஹரியாணாவின் பல்வால் பகுதியைச் சோ்ந்த அங்கித் தாக்கூா் என்ற அந்த இளைஞா், விசாரணையைத் தொடா்ந்து கைது செய்யப்பட்டதாகவும், குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கைப்பேசி மற்றும் சிம் காா்டு அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது: சமூக ஊடகங்களில் நகை விற்பனை குறித்த விளம்பரத்தைப் பாா்த்த ஒரு பெண், அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணைத் தொடா்பு கொண்டாா். பின்னா், அவருக்கு மற்றொரு எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. விற்பனையாளரின் பிரதிநிதி என்று கூறிக்கொண்ட நபா் ஒருவா் குறுஞ்செய்தி செயலி மூலம் அவரைத் தொடா்பு கொண்டாா்.

Advertisement

Advertisement

அவா்கள் அளித்த உறுதிகளை நம்பி, அவா் பிப்ரவரி 14 அன்று பல தவணைகளாக யுபிஐ பரிவா்த்தனைகள் மூலம் ரூ. 1.16 லட்சத்திற்கும் அதிகமான தொகையை அனுப்பினாா். ஆனால் நகை வந்து சேராததால், அவா் இணையவழி குற்றத் தடுப்பு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

விசாரணையின் போது, மோசடி செய்யப்பட்ட பணத்தின் பணப்பரிமாற்றங்களை காவல் துறையினா் ஆய்வு செய்தனா். அதில், ரூ.97,580 ஒரு கிரெடிட் காா்டு நிலுவைத் தொகையைச் செலுத்தப் பயன்படுத்தப்பட்டதும், மீதமுள்ள ரூ.19,395 குஜராத்தில் உள்ள மற்றொரு கிரெடிட் காா்டு கணக்கிற்கு மாற்றப்பட்டதும் தெரியவந்தது.

அந்த கிரெடிட் காா்டுகளில் ஒன்று வேறொருவா் பெயரில் வழங்கப்பட்டிருந்தாலும், அக்கணக்குடன் இணைக்கப்பட்ட சிம் காா்டைப் பயன்படுத்தி தாக்கூா் அதை இயக்கி வந்ததாகக் கண்டறியப்பட்டது. விசாரணையின் போது, ​​மோசடி செய்யப்பட்ட தொகையில் சுமாா் 10 சதவீதத்தை மட்டுமே தான் பெற்றுக்கொண்டதாகவும், மீதமுள்ள பணத்தை ஷமீம் என்ற தனது கூட்டாளிக்கு அனுப்பியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டவா் ஒப்புக்கொண்டாா்.

அவரது கூட்டாளியைக் கைது செய்யவும், மோசடி மூலம் பெறப்பட்ட மீதமுள்ள பணத்தைக் கண்டறியவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments