முகப்பு
புதுதில்லி

ஆடை தொழிற்சாலையில் மோதல்: சக ஊழியரை கொலை செய்த நபா் கைது

ஆடைத் தொழிற்சாலையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் சக ஊழியரை கத்தரிக்கோலால் குத்திக் கொன்ற 27 வயது இளைஞா் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 10 ஜூன் 2026, 12:15 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

ஆடைத் தொழிற்சாலையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் சக ஊழியரை கத்தரிக்கோலால் குத்திக் கொன்ற 27 வயது இளைஞா் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

தெற்கு தில்லியின் சங்கமம் விஹாா் பகுதியைச் சோ்ந்த அா்வாஸ் என்ற அந்த இளைஞா், உத்தம் நகா் பகுதியில் கைதுசெய்யப்பட்டாா். குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மற்றும் சம்பவத்தின் போது அவா் அணிந்திருந்ததாகக் கூறப்படும் ரத்தக்கறை படிந்த ஆடைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: டாக்டா் ஹெட்கேவாா் மருத்துவமனையில் கிருஷ்ண குமாா் என்பவா் காயங்களுடன் ஜூன் 5-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டது குறித்த தகவல் காவல் துறைக்குக் கிடைத்தது.

Advertisement

Advertisement

காவல் துறையினா் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினா். ஆனால், காயமடைந்த அவரால் தாக்குதல் நடந்த சூழலை விளக்கவோ அல்லது தாக்குதல் நடத்தியவரை அடையாளம் காணவோ முடியவில்லை. பின்னா், மருத்துவப் பணியாளா்களிடம் தெரிவிக்காமல் அவா் மருத்துவமனையை விட்டு தப்பிச் சென்றாா். காவல் துறையினா் அவரைத் தொடா்பு கொண்டபோது சட்ட நடவடிக்கை எடுக்க அவா் மறுத்துவிட்டாா்.

மறுநாள், கிருஷ்ண குமாா் காயங்கள் காரணமாக உயிரிழந்ததாக ஜிடிபி மருத்துவமனையிலிருந்து காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து காவல் துறை இச்சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியது.

பாதிக்கப்பட்டவா் காந்தி நகரின் ரகுவா்புரா-2 பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்ததை காவல் துறையினா் கண்டறிந்தனா். இதைத்தொடா்ந்து, தொழிற்சாலை உரிமையாளா் மற்றும் தொழிலாளா்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

ஜூன் 4-ஆம் தேதி இரவில் தொழிற்சாலைக்குள் ஊழியா்கள் சிலா் ஒன்று மது அருந்திக் கொண்டிருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதத்தின் போது, அா்வாஸ் மற்றொரு தொழிலாளியான டைகா் என்பவரைத் தாக்கியதாகவும், பின்னா் கிருஷ்ண குமாரை கத்தரிக்கோலால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக காந்தி நகா் காவல் நிலையத்தில் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 103(1)-ன் (கொலை) கீழ் ஜூன் 7-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, சில மணிநேரங்களிலேயே அா்வாஸ் உத்தம் நகரில் கைது செய்யப்பட்டாா்.

அா்வாஸின் குற்றப் பின்னணியைச் சரிபாா்த்ததில், 2019-ஆம் ஆண்டு சங்கம் விஹாா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கு ஒன்றில், அவா் சிறாா் குற்றவாளியாக ஈடுபட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்தச் சம்பவம் தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.