டெங்கு, மலேரியா பாதிப்பு நிகழாண்டில் இதுவரை குறைவு: தில்லி மாநகராட்சி
தில்லியில் நிகழாண்டில் இதுவரை 45 மலேரியா, 171 டெங்கு மற்றும் 10 சிக்குன்குனியா பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும் இந்த பாதிப்புகளால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தில்லி மாநகராட்சியின் வாராந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் நிகழாண்டில் இதுவரை 45 மலேரியா, 171 டெங்கு மற்றும் 10 சிக்குன்குனியா பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும் இந்த பாதிப்புகளால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) வாராந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 20-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்திற்கான தரவுகள், கடந்த சில ஆண்டுகளின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா பாதிப்புகள் குறைவாகவே உள்ளதைக் காட்டுகின்றன.
மலேரியா பாதிப்புகள் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 77-ஆக இருந்தது. 2024-இல் 66-ஆகக் குறைந்துள்ளன. ஜூன் மாதத்தில் 8 புதிய மலேரியா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் நிகழாண்டின் மொத்த எண்ணிக்கை 45-ஐ எட்டியுள்ளது. இதில் மேற்கு தில்லி அதிகபட்சமாக 15 பாதிப்புகளைக் கொண்டுள்ளது.
Advertisement
Advertisement
டெங்கு பாதிப்புகளும் கடந்த ஆண்டை விடக் குறைவாகவே உள்ளன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 208 பாதிப்புகள் பதிவாகியிருந்த நிலையில், நிகழாண்டில் இதுவரை 171 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
அந்த வாரத்தில் 9 புதிய டெங்கு பாதிப்புகள் பதிவாகின. ஜூன் 20 வரை ஜூன் மாதத்தில் மட்டும் 29 பாதிப்புகள் கண்டறியப்பட்டன. மேற்கு தில்லி மற்றும் மத்திய தில்லி ஆகிய பகுதிகளில் அதிகபட்சமாக முறையே 30 மற்றும் 23 டெங்கு பாதிப்புகள் பதிவாகின.
மேலும், அந்த வாரத்தில் மூன்று புதிய சிக்குன்குனியா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டது. இதனால், நிகழாண்டின் மொத்த எண்ணிக்கை 10-ஐ எட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 14-ஆக இருந்தது.
பருவமழைக்காலத்திற்குத் தயாராகும் வகையில், கொசுப் புழுக்களை அழிக்கும் நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்புப் பணிகளை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஜன.1 முதல் ஜூன் 20 வரையில் கொசு பெருக்கத்தைக் கண்டறியும் பணியாளா்கள் 1.78 கோடிக்கும் அதிகமான வீடுகளை ஆய்வு செய்தனா். இதில் 40,487 வீடுகளில் கொசுக்கள் உற்பத்தியாவது கண்டறியப்பட்டது.
கொசு உற்பத்தியைத் தடுக்கத் தவறியதற்காக மாநகராட்சி 37,840 நோட்டீஸ்கள் வழங்கியது. 4,287 வழக்கு நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளது. கொசுக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, 1.92 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளில் மருந்து தெளிக்கப்பட்டது. மேலும், 228 இடங்களில் கொசுக்களை உண்ணும் மீன்கள் வளா்க்கப்பட்டு வருகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.