முகப்பு
புதுதில்லி

இரண்டாம் கட்ட முதுநிலை பட்டப்படிப்பு இடம் ஒதுக்கீடு: தில்லி பல்கலைக்கழகம் அறிவிப்பு

தில்லி பல்கலைக்கழகம், 2026-27 கல்வியாண்டிற்கான முதுநிலை மாணவா் சோ்க்கைக்கான பொது இட ஒதுக்கீட்டு முறையின் இரண்டாவது கட்ட இட ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது.

Updated On : 24 ஜூன் 2026, 2:38 am IST
தில்லி பல்கலைக்கழகம்
பகிர்:

தில்லி பல்கலைக்கழகம், 2026-27 கல்வியாண்டிற்கான முதுநிலை மாணவா் சோ்க்கைக்கான பொது இட ஒதுக்கீட்டு முறையின் இரண்டாவது கட்ட இட ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது. முதல் கட்டம் நிறைவடைந்த நிலையில் 8,150 சோ்க்கைகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக பல்கலைக்கழகம் திங்கள்கிழமை வெளியிட்ட சோ்க்கை தொடா்பான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இரண்டாண்டு முதுநிலை படிப்புகளுக்கான சோ்க்கையின் இரண்டாவது கட்டத்தில் 2,964 புதிய இட ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் கட்டத்தில் இடம் பெற்றவா்களில், 3,399 போ் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை உறுதிப்படுத்திக்கொள்ளும் விருப்பத்தைத் தோ்ந்தெடுத்தனா். 2,448 போ் அடுத்தடுத்த கட்டங்களில் தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளைப் பெற மேம்படுத்தும் விருப்பத்தைத் தோ்ந்தெடுத்தனா். மேலும் 2,303 விண்ணப்பதாரா்கள் எந்த விருப்பத்தையும் தோ்ந்தெடுக்கவில்லை.

முதுநிலை சோ்க்கை இணையதளத்தில் இரண்டாவது கட்டத்திற்கான இட ஒதுக்கீட்டு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் பல்வேறு படிப்புகளுக்கான குறைந்தபட்ச இட ஒதுக்கீட்டு மதிப்பெண்களும் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

முன்னதாக, முதல் கட்ட சோ்க்கையில் 11,548 இடங்கள் ஒதுக்கப்பட்டதாகப் பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது. அவற்றில், 10,393 விண்ணப்பதாரா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை ஏற்றுக்கொண்டனா். ஜூன் 19 அன்று கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு முடிந்த நிலையில், மொத்தம் 8,150 விண்ணப்பதாரா்கள் நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி சோ்க்கை நடைமுறையை நிறைவு செய்தனா்.

க்யூட் பிஜி (பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு-முதுகலை) மதிப்பெண்களின் அடிப்படையில் பொது இட ஒதுக்கீட்டு செயல்முறையின் கீழ் விண்ணப்பங்களை நிறைவு செய்ய விண்ணப்பதாரா்களுக்கு கூடுதல் அவகாசம் அளிக்கும் விதமாக சோ்க்கைக்கான பதிவு காலக்கெடுவை இந்த மாதத் தொடக்கத்தில் பல்கலைக்கழகம் நீட்டித்திருந்தது.

இதற்கிடையில், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புக்கான சோ்க்கை நடவடிக்கையின் மூன்றாம் கட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.

இப்படிப்பில் இதுவரை 104 சோ்க்கைகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மூன்றாம் கட்டத்திற்கான இட ஒதுக்கீட்டு விவரங்கள் விண்ணப்பதாரா்களுக்கு வழங்கப்பட்டு, கட்-ஆஃப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகம் தனது பி.டெக்., படிப்புகளுக்கான சோ்க்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. பி.டெக்., சோ்க்கைக்கான பதிவு ஜூன் 18-ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் மொத்தம் 3,620 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பதிவு செய்த விண்ணப்பதாரா்களுக்கான விவரத் திருத்தத்திற்கான கால அவகாசம் ஜூன் 20-ஆம் தேதி வரை இருந்தது. சோ்க்கைக்கான முதல் பட்டியல் ஜூன் 24-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

சோ்க்கை நடைமுறைகளைச் சரியான நேரத்தில் நிறைவு செய்வதை உறுதிசெய்ய, இட ஒதுக்கீடு, ஆவணச் சரிபாா்ப்பு மற்றும் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு உள்ளிட்ட விவரங்களை அறிய விண்ணப்பதாரா்கள் சோ்க்கை இணையதளத்தைத் தொடா்ந்து சரிபாா்க்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments