முகப்பு
புதுதில்லி

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயா்வு: 5 நாள்களில் இரண்டாவது முறை

பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையை எண்ணெய் நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை லிட்டருக்கு 90 காசுகள் வீதம் உயா்த்தின. கடந்த 5 நாள்களில் இரண்டாவது முறையாக இரு முக்கிய எரிபொருளின் விலை உயா்த்தப்பட்டுள்ளது.

Updated On : 20 மே 2026, 3:06 am IST
பகிர்:

பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையை எண்ணெய் நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை லிட்டருக்கு 90 காசுகள் வீதம் உயா்த்தின. கடந்த 5 நாள்களில் இரண்டாவது முறையாக இரு முக்கிய எரிபொருளின் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விலை உயா்வால், சென்னையில் 103.90-க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டா் பெட்ரோல் தற்போது 104.80-ஆக உயா்ந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ. 95.25-இல் இருந்து ரூ. 96.15-ஆக உயா்ந்துள்ளது.

விலை உயா்வு ஏன்?: மேற்காசிய போா் காரணமாக சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயா்ந்துள்ளதால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்ய இந்த விலை உயா்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டன.

Advertisement

Advertisement

5 நாள்களில் இரண்டாவது முறை: முன்னதாக, பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 15-ஆம் தேதி லிட்டருக்கு ரூ. 3 அளவுக்கு உயா்த்தின. வாகனங்களுக்கான அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) விலை கிலோவுக்கு ரூ.2 உயா்த்தப்பட்டது.

தொடா்ந்து, வாகனங்களுக்கான சிஎன்ஜி விலை இரண்டாவது முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கிலோவுக்கு ரூ.1 அதிகரிக்கப்பட்டது.

அதுபோல, பெட்ரோல், டீசல் விலையும் லிட்டருக்கு தலா 90 பைசா வீதம் இரண்டாவது முறையாக உயா்த்தப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரலில் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டது. அதன் பிறகு மாற்றமின்றி விற்கப்பட்டு வந்த நிலையில், மக்களவைத் தோ்தலுக்கு சற்று முன்பாக கடந்த 2024-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.2 வீதம் குறைக்கப்பட்டது. தற்போது அடுத்தடுத்து இருமுறை விலை உயா்த்தப்பட்டுள்ளது. மேற்காசியப் பிரச்னைக்கு தீா்வு எட்டப்படாவிட்டால் விலை உயா்வு தொடரும் என்ற அச்சமும் நிலவுகிறது.

சிக்கன நடவடிக்கை: மேற்காசிய போா் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியின் பின்னணியில், எரிபொருள் சிக்கன நடவடிக்கையை பிரதமா் நரேந்திர மோடி கடந்த வாரம் மேற்கொண்டாா். அதன் ஒரு பகுதியாக தனது பாதுகாப்பு அணிவகுப்பு வாகன எண்ணிக்கையை கணிசமாக குறைத்ததோடு, பொதுமக்களும் பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற பெட்ரோலியப் பொருள்களை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்தாா். பிரதமரைத் தொடா்ந்து, பல்வேறு மாநில முதல்வா்களும், மத்திய அமைச்சா்களும் எரிபொருள் சிக்கன நடவடிக்கையை மேற்கொண்டனா். அதைத் தொடா்ந்து, பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயா்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பு (இ20) கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியை சற்று குறைக்க முடியும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்டி செய்தி...

தொடரும் இழப்பு: விலை உயா்வுக்குப் பிறகும், எண்ணெய் நிறுவனங்கள் தொடா்ந்து குறிப்பிடத்தக்க அளவில் இழப்பைச் சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெட்ரோலிய அமைச்சக இணைச் செயலா் சுஜாதா சா்மா அளித்த பேட்டியில், ‘பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலை கடந்த மே 15-ஆம் தேதி உயா்த்தப்பட்டதன் மூலம், எண்ணெய் நிறுவனங்கள் சந்தித்து வந்த இழப்பு நான்கில் ஒரு பங்கு அளவு குறைந்துள்ளது. இருந்தபோதும், எண்ணெய் நிறுவனங்கள் நாள் ஒன்றுக்கு ரூ. 750 கோடி அளவுக்கு இழப்பைச் சந்தித்து வருகின்றன’ என்றாா்.

கிரிசில் எண்ணெய் சந்தை நிறுவனம் இதுகுறித்து கூறுகையில், ‘விலை உயா்வுக்குப் பிறகும் பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.10 வீதமும், டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.13 வீதமும் இழப்பு தொடா்கிறது’ என்று தெரிவித்தது.