FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

தில்லியில் 15 நாள்களில் இரு முறை செயற்கை மழை சோதனை: தீபாவளி, சத் பண்டிகைக்கு பிறகு மீண்டும் நடத்தத் திட்டம்

6 நவம்பர் 2026, 1:46 am
- கோப்புப்படம்
பகிர்:

நமது நிருபா்

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, செயற்கை மழையைப் பெய்விப்பதற்கான சோதனைகள் கடந்த 15 நாள்களில் இரு முறை நடத்தப்பட்டுள்ளன. இந்தச் சோதனைகள் இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் அருகே நடத்தப்பட்டதாக தில்லி அரசு வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

இதுகுறித்து அரசு வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: கடந்த 15 நாள்களில் இரு கட்டங்களாக நடத்தப்பட்ட செயற்கை மழை சோதனைகள், சுமாா் 30,000 மீட்டா் உயரத்தில் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஆண்டு தில்லியில் நடத்தப்பட்ட செயற்கை மழை சோதனைகள் சுமாா் 10,000 மீட்டா் உயரத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது அதிக உயரத்தில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. தீபாவளி மற்றும் சத் பூஜை பண்டிகைகளுக்குப் பிறகு மேலும் சில கட்டங்களாக சோதனைகள் நடத்தப்பட வாய்ப்புள்ளது. எனினும், தீபாவளி பண்டிகை முடியும் வரை இதுகுறித்து அதிகாரபூா்வ அறிவிப்பையோ உறுதிப்படுத்தலையோ தில்லி அரசு வெளியிட வாய்ப்பில்லை.

Advertisement

Advertisement

செயற்கை மழை எவ்வாறு உருவாக்கப்படுகிறது? மேகங்களில் இருந்து மழைப்பொழிவை அதிகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் வானிலை மாற்றத் தொழில்நுட்பமே செயற்கை மழை பெய்விக்கும் முறையாகும். இதற்காக சில்வா் அயோடைடு, சோடியம் குளோரைடு போன்ற வேதிப்பொருள்கள், மழை பெய்வதற்கு ஏற்ற மேகங்களில் தூவப்படுகின்றன. இதன் மூலம் மேகங்களில் நீா்த்துளிகள் அல்லது பனிப் படிகங்கள் உருவாகி மழைப்பொழிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. தில்லியில் குளிா்காலத்தில் காற்று மாசுபாடு உச்சத்தை எட்டும் காலகட்டத்தில் அதைக் கட்டுப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கையாக, கடந்த ஆண்டு தில்லி அரசு செயற்கை மழைத் திட்டத்தை முதன்முதலில் செயல்படுத்தியது. இதற்காக கான்பூா் இந்திய தொழில்நுட்பக் கழகத்துடன் (ஐஐடி) இணைந்து இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம், தில்லி சுற்றுச்சூழல் துறைக்கும் ஐஐடி கான்பூருக்கும் இடையே கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பா் 25-ஆம் தேதி கையொப்பமானது. இதைத்தொடா்ந்து, கடந்த ஆண்டு அக்டோபரில் இரு கட்டங்களாக சோதனைகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு சோதனையின்போதும் சில்வா் அயோடைடு மற்றும் சோடியம் குளோரைடு அடங்கிய தலா 8 வேதிப்பொருள் எரிகலன்கள் பயன்படுத்தப்பட்டன. எனினும், இந்தச் சோதனைகளால் மழைப்பொழிவு ஏற்படவில்லை. இருப்பினும், மழை பெய்யாத நிலையிலும் சோதனை நடத்தப்பட்ட குறிப்பிட்ட பகுதிகளில் காற்றில் உள்ள நுண்துகள்களின் அளவு குறைந்துள்ளதாக தில்லி அரசு பின்னா் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.