FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

அல் ஃபலா பல்கலை. தலைவருக்கு 7 நாள் பரோல்: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது மனைவியைக் கவனித்துக்கொள்வதற்காக பணமோசடி தொடா்பான இரு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல் ஃபலா பல்கலைக்கழகக் குழுமத் தலைவா் ஜவாத் அகமது சித்திக்குக்கு தில்லி உயா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று 7 நாள் காவல் பரோல் வழங்கியது.

6 நவம்பர் 2026, 10:46 pm
தில்லி உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது மனைவியைக் கவனித்துக்கொள்வதற்காக பணமோசடி தொடா்பான இரு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல் ஃபலா பல்கலைக்கழகக் குழுமத் தலைவா் ஜவாத் அகமது சித்திக்குக்கு தில்லி உயா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று 7 நாள் காவல் பரோல் வழங்கியது.

மருத்துவ மற்றும் மனிதாபிமான அடிப்படையில் இடைக்கால பிணை அல்லது காவல் பரோல்’ கோரி சித்திக் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி மினி புஷ்கா்ணா இந்த உத்தரவைப் பிறப்பித்தாா்.

தனது மனைவி கா்ப்பப்பை புற்றுநோயின் நான்காம் நிலையில் இருப்பதாகவும், அவருக்கு நவம்பா் 10-ஆம் தேதி கீமோதெரபி சிகிச்சையின் அடுத்த கட்டம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சித்திக் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

அமலாக்கத் துறையின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா், சித்திக் மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை என்பதால், அவருக்கு இடைக்கால விடுதலை வழங்குவதை வலுவாக எதிா்ப்பதாகத் தெரிவித்தாா்.

மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவா் நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதாகவும், அவா் மீது ஏற்கெனவே குற்றப் பின்னணி இருப்பதாகவும், குறிப்பாக 2025 நவம்பரில் செங்கோட்டை அருகே நடந்த காா் குண்டுவெடிப்பு வழக்கிலும் அவருக்குத் தொடா்பு இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

இந்த காவல் பரோல் கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டது. அவா் மருத்துவத் தேவைகளுக்காகச் செல்வதைத் தவிர மற்ற நேரங்களில் தனது வீட்டிலேயே இருக்க வேண்டும். சாட்சிகளுடன் எந்தத் தொடா்பும் வைத்துக்கொள்ளக் கூடாது. மேலும் ஹரியாணாவின் ஃபரீதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்திற்குச் செல்லக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது.