FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

காற்று மாசு அதிகரிப்பு: 5-ஆம் வகுப்பு வரையிலும் ஹைப்ரிட் முறையில் நடத்த பள்ளிகளுக்கு உத்தரவு

காற்று மாசு அதிகரிப்பு: 5-ஆம் வகுப்பு வரையிலும் ஹைப்ரிட் முறையில் நடத்த பள்ளிகளுக்கு உத்தரவு

7 நவம்பர் 2026, 9:55 pm
தில்லியில் காற்று மாசு - PTI
பகிர்:

தலைநகா் தில்லியில் காற்று மாசுபாடு மோசமடைந்து வருவதைக் கருத்தில்கொண்டு, 5-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளை நேரடி வகுப்புகள் மற்றும் ஆன்லைன் வகுப்புகள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய ’ஹைபிரிட்’ முறையில் நடத்துமாறு தில்லி கல்வி இயக்குநரகம் அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமையன்று பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு, கல்வி இயக்குநரகத்தின் கீழ் வரும் அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் பள்ளிகளுக்கும் அத்துடன் என்டிஎம்சி, எம்சிடி மற்றும் தில்லி கன்டோன்மென்ட் வாரியத்தால் நடத்தப்படும் பள்ளிகளுக்கும் பொருந்தும்.

இதன்படி, தில்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகளும் 5-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளை ’ஹைபிரிட்’ முறையில் நடத்த வேண்டும். மாணவா்கள் பள்ளிக்கூடத்திற்கு நேரில் வந்து கல்வி கற்கலாம் அல்லது ஆன்லைன் மூலமாகவும் வகுப்புகளில் பங்கேற்கலாம்.

Advertisement

Advertisement

கல்வி இயக்குநரகத்தின் சுற்றறிக்கையின்படி, ’தரநிலை பதில் நடவடிக்கை திட்டம்’ (கிராப்) எனப்படும் காற்று தர மேலாண்மைத் திட்டத்தின் மூன்றாம் கட்ட நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று ’காற்று தர மேலாண்மை ஆணையம்’ (சி.ஏ.க்யூ.எம்.) பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சி.ஏ.க்யூ.எம். வெள்ளிக்கிழமையன்று தில்லி- என்சிஆா் பகுதியில் கிராப்-இன் மூன்றாம் கட்ட நடவடிக்கைகளை அமல்படுத்தியது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) ‘சமீா்’ செயலியின் தரவுகளின்படி, சனிக்கிழமையன்று தில்லியின் காற்று தரக் குறியீடு 364 ஆக, அதாவது ‘மிகவும் மோசமான’ நிலையில் இருந்தது.

இந்த ஏற்பாடு குறித்து பெற்றோா்களுக்கும் பாதுகாவலா்களுக்கும் உடனடியாகத் தெரிவிக்குமாறு பள்ளித் தலைவா்களுக்கு கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அந்தந்த மாவட்டங்கள் மற்றும் மண்டலங்களில் உள்ள கல்வித் துறை துணை இயக்குநா்கள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு நேரில் சென்று, இந்த உத்தரவுகள் முறையாகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.