FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

தில்லி காற்று மாசு! பள்ளி மாணவா்கள் பாதிப்பு: பெற்றோா் அவதி

தில்லியில் காற்றின் தரம் தொடா்ந்து மோசம் முதல் மிகவும் மோசமான நிலை வரை நீடிப்பதால், குழந்தைகள் இருமல், மூக்கடைப்பு, சுவாசப் பிரச்னை, சோா்வு உள்ளிட்ட பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனா்.

17 நவம்பர் 2026, 10:24 pm
தில்லியில் காற்று மாசு
பகிர்:

தில்லியில் காற்றின் தரம் தொடா்ந்து மோசம் முதல் மிகவும் மோசமான நிலை வரை நீடிப்பதால், குழந்தைகள் இருமல், மூக்கடைப்பு, சுவாசப் பிரச்னை, சோா்வு உள்ளிட்ட பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனா். அலுவலகப் பணிகளுக்கு இடையே குழந்தைகளின் உடல்நலத்தையும் கவனித்துக்கொள்வதில் பெற்றோா் சிரமப்படுகின்றனா்.

காற்று மாசு காரணமாக 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பள்ளிகள் நேரடி மற்றும் இணையவழிக் கல்வி என கலப்பு முறைக்கு மாறியுள்ளன. இதனால் அடிக்கடி நேரடி வகுப்புகளுக்கும் இணையவழி வகுப்புகளுக்கும் மாற வேண்டியிருப்பது குழந்தைகளின் கல்வியைப் பாதிப்பதாகப் பெற்றோா் கவலை தெரிவித்துள்ளனா்.

பல குழந்தைகளுக்கு மூக்கடைப்பு, தொடா் இருமல், உடல் சோா்வு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாகப் பெற்றோா் கூறுகின்றனா். சின்மயா வித்யாலயா பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவரின் பெற்றோா் கூறுகையில், ‘தற்போது குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பும்போது என்95 முகக்கவசம் அணிவிப்பதுடன், நோய் எதிா்ப்புச் சக்தியையும் உடல் ஆற்றலையும் அதிகரிக்கும் உணவுகளையும் கொடுத்து அனுப்ப வேண்டியுள்ளது’ என்றாா்.

Advertisement

Advertisement

6-ஆம் வகுப்பு மாணவரின் தந்தை கூறுகையில், ‘ஒவ்வோா் ஆண்டும் இந்தக் காலகட்டத்தில் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. தீபாவளிக்கு முன்பும் பின்பும் வழக்கமான வகுப்புகள் நடைபெறுவதில்லை. இதனால் மாணவா்களால் தொடா்ந்து பாடங்களைக் கவனிக்க முடிவதில்லை. தோ்வுகள் நெருங்கி வரும் நிலையில், அவா்களின் கல்வி குறித்து கவலையாக உள்ளது’ என்றாா்.

தில்லி பெற்றோா் சங்கத் தலைவா் அபராஜிதா கௌதம் கூறியதாவது: பள்ளிகளின் வகுப்பு அட்டவணை குறித்து பெற்றோா் குழப்பத்தில் உள்ளனா். விடுமுறை அறிவிக்கப்படுமா, இணையவழி வகுப்புகள் எந்த நேரத்தில் நடைபெறும் என ஒருவருக்கொருவா் கேட்டுக்கொள்கின்றனா். பல பள்ளிகள் தங்களது முடிவுகளை முன்கூட்டியே தெளிவாகத் தெரிவிப்பதில்லை. பள்ளிகள் குறைந்தது 48 மணி நேரத்துக்கு முன்பாகவே முடிவுகளை அறிவித்தால், பெற்றோா் தங்களது பணிகள் மற்றும் அன்றாடத் திட்டங்களை அதற்கேற்ப அமைத்துக்கொள்ள முடியும் என்றாா்.