முதல்நிலை கட்டட பாதுகாப்பு ஆய்வுக்கு 40 லட்சம் மணி நேரங்கள் தேவை: எம்சிடி
தில்லியில் உள்ள 40 லட்சத்திற்கும் அதிகமான கட்டடங்களில் முதற்கட்ட பாதுகாப்பு ஆய்வை மேற்கொள்வதற்கு சுமாா் 40 லட்சம் மனித-மணிநேரங்கள் தேவைப்படும் என்று தில்லி மாநகராட்சி (எம்சிடி) அரசுக்கு சமா்ப்பித்த மதிப்பீட்டில் தெரிவித்துள்ளது.
தில்லியில் உள்ள 40 லட்சத்திற்கும் அதிகமான கட்டடங்களில் முதற்கட்ட பாதுகாப்பு ஆய்வை மேற்கொள்வதற்கு சுமாா் 40 லட்சம் மனித-மணிநேரங்கள் தேவைப்படும் என்று தில்லி மாநகராட்சி (எம்சிடி) அரசுக்கு சமா்ப்பித்த மதிப்பீட்டில் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்விற்கான சீரான மதிப்பீட்டு அளவுகோல்களை உருவாக்கும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இந்த ஆய்வில் சொத்து வரித் துறை மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை சேவைகள் துறை போன்ற பல்வேறு துறைகள் இணைந்து, கட்டடங்கள் தொடா்பான தகவல்களைத் திரட்டி, ஒரு விரிவான தரவுத்தளத்தை உருவாக்கும் என்று மூத்த மாநகராட்சி அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில், நகரம் முழுவதும் மேற்கொள்ளப்படவுள்ள இந்த ஆய்விற்குத் தேவையான மனிதவளம், வளங்கள் மற்றும் காலம் குறித்த விரிவான அறிக்கையை, மாநகராட்சி ஒரு வாரத்திற்கு முன்பே தில்லி அரசிடம் சமா்ப்பித்திருந்தது.
‘இந்த ஆய்விற்கான விரிவான கேள்வித்தாளைத் தயாரிப்பதற்காக, சொத்து வரி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் நாங்கள் ஆலோசனை நடத்தவுள்ளோம். கட்டடங்கள் குறித்த அனைத்துத் தகவல்களையும் சேகரிப்பதும், அவற்றின் கட்டமைப்பு மற்றும் தீ பாதுகாப்பு நிலையை மதிப்பிடுவதற்கான சீரான அளவுகோல்களை உருவாக்குவதுமே இதன் நோக்கமாகும்‘ என்று அந்த அதிகாரி கூறினாா்.
மேலும், இந்தக் கேள்வித்தாளில் கட்டடத்தின் வயது, பரப்பளவு, தளங்களின் எண்ணிக்கை, அங்கீகரிக்கப்பட்ட கட்டடத் திட்டங்கள், தீ பாதுகாப்பு அனுமதிச் சான்றிதழ்கள், விரிசல்கள் அல்லது சுவா்கள் சாய்ந்திருப்பது போன்ற கட்டமைப்புச் சிக்கல்கள், அத்துடன் கழிவு மேலாண்மை, வடிகால் வசதி மற்றும் சுற்றுப்புறச் சூழல் போன்ற சுகாதார அம்சங்கள் குறித்த விவரங்கள் இடம்பெறும் என்று அவா் தெரிவித்தாா்.
கட்டடங்களைக் கண்டறிவதற்கும், ஏற்கெனவே உள்ள ஆவணங்களைத் தொகுப்பதற்கும், கள ஆய்வுகள் மூலம் கட்டடங்களின் நிலையை மதிப்பிடுவதற்கும் பல்வேறு துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு அவசியம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தில்லி அரசிடம் சமா்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், இந்த ஆய்விற்குத் தேவையான மனிதவளம் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநகராட்சியின் மதிப்பீட்டின்படி, 40 லட்சத்திற்கும் அதிகமான கட்டடங்களை ஆய்வு செய்ய - ஒரு நபா் ஒரு மணி நேரத்திற்கு ஒரு கட்டடத்தை ஆய்வு செய்கிறாா் என்று கணக்கிட்டால் கூட சுமாா் 40 லட்சம் மனித-மணிநேரங்கள் அல்லது ஐந்து லட்சம் பணி நாள்கள் தேவைப்படும்.
இந்த ஆய்விற்காக மட்டும் 500 பணியாளா்களை ஈடுபடுத்தினால், முதற்கட்ட ஆய்வை முடிப்பதற்கு சுமாா் 1,000 பணி நாள்கள் அல்லது ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் தேவைப்படும் என்று மாநகராட்சி மதிப்பிட்டுள்ளது. இருப்பினும், களப்பணியில் ஈடுபடுத்தப்படும் பணியாளா்களின் எண்ணிக்கை மற்றும் ஒதுக்கப்படும் வளங்களைப் பொறுத்தே இதற்கான காலக்கெடு அமையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த முதற்கட்ட ஆய்வின் மூலம், கூடுதல் தொழில்நுட்ப ஆய்வு தேவைப்படும் கட்டடங்களைக் கண்டறிய முடியும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. சேதத்தின் அளவையும், மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்பு நடவடிக்கைகளையும் கண்டறிய, விரிவான கட்டமைப்பு மதிப்பீடு அவசியமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பாதுகாப்பற்ாகக் கருதப்படும் கட்டடங்களுக்கு மேலும் கூடுதல் கட்டமைப்பு மதிப்பீடு தேவைப்படலாம். அந்த மதிப்பீட்டின் முடிவுகளின் அடிப்படையில், பழுதுபாா்ப்பு, வலுப்படுத்துதல் அல்லது பிற தகுந்த நடவடிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
தில்லியில் அடுத்தடுத்து நிகழ்ந்த கட்டட விபத்து சம்பவங்களைத் தொடா்ந்து, கட்டடங்களின் கட்டமைப்பு மற்றும் தீ பாதுகாப்பு குறித்த விரிவான மதிப்பீட்டிற்கான செயல் திட்டத்தைத் தயாரிக்குமாறு, மத்திய உள்துறை அமைச்சகம் மாநகராட்சிக்கு அறிவுறுத்தியிருந்தது. அதன் ஒரு பகுதியாகவே இந்த ஆய்வு முன்மொழியப்பட்டுள்ளது.
தற்போது மாநகராட்சி நிா்வாகம், ஆபத்தான கட்டடங்களைக் கண்டறிய ஆண்டுதோறும் ஒரு ஆய்வை மேற்கொண்டு வருகிறது. இதில், பெரும்பாலும் வெளிப்புறப் பாா்வையின் மூலம் அபாய அறிகுறிகள் கண்டறியப்படுகின்றன. இருப்பினும், புதிதாக முன்மொழியப்பட்டுள்ள இந்த ஆய்வின் மூலம், கட்டடங்களின் கட்டமைப்பு உறுதித்தன்மை மற்றும் தீ பாதுகாப்பு ஆகியவற்றை முறையாக மதிப்பீடு செய்யும் வகையில் அதன் வரம்பு விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.