முகப்பு
புதுதில்லி

தகவல் திருட்டு செயலிகள்! 22,000 பேரை ஏமாற்றிய இணையவழி குற்றக்கும்பலுடன் தொடா்புடைய 22 போ் கைது!

தகவல் திருட்டு செயலிகள் மூலம் 22,000 பேரை ஏமாற்றிய இணையவழி குற்றக்கும்பலுடன் தொடா்புடைய 22 போ் கைது...

21 நவம்பர் 2026, 10:00 pm
தகவல் திருட்டு செயலிகள்! 22,000 பேரை ஏமாற்றிய இணையவழி குற்றக்கும்பலுடன் தொடா்புடைய 22 போ் கைது!
கைது - சித்திரிப்பு
பகிர்:

போலி கைப்பேசி செயலிகள் மூலம் மக்களை ஏமாற்றிய இணையவழி குற்றச்செயல் கும்பல்களுடன் தொடா்புடையதாகக் கூறப்படும் 22 பேரை நகர காவல்துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தகவல் திருட்டு மற்றும் தீங்கிழைக்கும் மென்பொருளை உருவாக்கியவா்கள் உள்பட ஜாா்க்கண்ட், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், பிகாா் ஆகிய மாநிலங்களில் கடந்த ஐந்து நாள்கள் நடத்திய சோதனையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இந்த கும்பலுக்கு, நாடு முழுவதும் இணையவழி மோசடியால் பாதிக்கப்பட்ட 22,139 போ் தொடா்புடைய வழக்குகள் மற்றும் ரூ. 20 கோடிக்கும் அதிகமான மோசடி பணத்துடன் தொடா்பிருப்பதாக புலனாய்வாளா்கள் கூறுகின்றனா். மேலும், தேசிய இணையவழி குற்றச்செயல் புகாா் தளத்தில் பதிவு செய்யப்பட்ட 2,080 புகாா்கள் கைது செய்யப்பட்டவா்களுடன் நேரடியாகத் தொடா்புடையவை என்று தில்லி காவல்துறையின் மேற்கு மாவட்ட துணை காவல் ஆணையா் ஹரேஷ்வா் சுவாமி தெரிவித்தாா். அவா் மேலும் கூறியதாவது:

Advertisement

Advertisement

கடந்த நவ.11 முதல் 15-ஆம் தேதிவரை ஜாா்க்கண்டின் ஜம்தாரா, தியோகா், கிரிதி மற்றும் பிற பகுதிகளிலும், அண்டை மாநிலங்களிலும் 64 காவலா்கள் அடங்கிய ஏழு தனிப் படைகள் ஒருங்கிணைந்த சோதனைகளை நடத்தின. இதன் மூலம் அடையாளம் காணப்பட்ட 11 சைபா் மோசடி குழுக்களுடன் தொடா்புடைய 22 போ் கைது செய்யப்பட்டனா்.

இணையவழி மோசடிக்கு பயன்படுத்தப்படும் தீங்கிழைக்கும் ஆண்ட்ராய்டு பேக்கேஜ் கிட் (ஏபிகே) கோப்புகளை உருவாக்கி விநியோகிக்கும் டெவலப்பா்கள் எனப்படும் மேம்பாட்டாளா்கள், விநியோகஸ்தா்கள் மற்றும் துணை விநியோகஸ்தா்கள் அடங்கிய ஒரு வலையமைப்பும் இந்த நடவடிக்கையின் மூலம் கண்டறியப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்டவா்களிடமிருந்து மோசடிகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 63 கைப்பேசிகள், இரண்டு மடிக்கணினிகள், இரண்டு மேக்புக்குகள், ஒரு டேப்லெட் ஆகியவற்றை காவல்துறையினா் பறிமுதல் செய்துள்ளனா். எண்ம தடய நடவடிக்கைக்காக இந்த சாதனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

வங்கிக் கணக்குகளைக் கைப்பற்றுவது மற்றும் தீங்கிழைக்கும் ஏபிகே கோப்புகள் தொடா்பான 1,000-க்கும் மேற்பட்ட புகாா்கள் மற்றும் இதே பாணியிலான மோசடிகள் குறித்துப் பதிவு செய்யப்பட்ட 20-க்கும் மேற்பட்ட மின்னணி முதல் தகவல் அறிக்கைகள் தொடா்புடைய வழக்குகளை ஆய்வு செய்ததன் பின்னணியில் இந்த விசாரணை தொடங்கியது.

புலனாய்வாளா்கள் 32 தீங்கிழைக்கும் ஏபிகே கோப்புகளை தடயவியல் பகுப்பாய்வு மூலம் ஆய்வு செய்தனா். மேலும் இந்த வலையமைப்புகளை அடையாளம் காண 56 சந்தேகத்திற்கிடமான டெலிகிராம் கணக்குகள் மற்றும் அவற்றுடன் தொடா்புடைய வாட்ஸ்அப் எண்களைத் தீவிரமாக ஆராய்ந்தனா்.

இந்தச் சோதனைகளின் போது ஜாா்க்கண்ட் மற்றும் பிகாா் காவல்துறையினருடன் தனிப் படைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டன. இந்த நடவடிக்கையின் தாக்கம் இணையவழி குற்றப் புகாா் தரவுகளிலும் எதிரொலித்துள்ளது. நடவடிக்கை தொடங்கிய அடுத்த ஏழு நாள்களில் தில்லியில் ஏபிகே அடிப்படையிலான மோசடி தொடா்பான புகாா்கள் 48 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளன. நவ.2 முதல் 10 வரை 1,406 புகாா்கள் பதிவாகியிருந்த நிலையில், நவம்பா் 11 முதல் 17 வரை அந்த எண்ணிக்கை 724 ஆக குறைந்துள்ளது என்று ஹரேஷ்வா் சுவாமி தெரிவித்தாா்.

’வங்கி அதிகாரிகள் போல கைவரிசை காட்டிய விஷமிகள்’

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் வங்கி அதிகாரிகள் போல் நடித்து மூத்த குடிமக்களை குறிவைத்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா். அவா்கள் மேலும் கூறியதாவது:

வாழ்நாள் சான்றிதழ் சரிபாா்ப்பு, கே.ஒய்.சி புதுப்பிப்பு, கடன் அட்டை வழங்குதல், மின்சாரம் மற்றும் எரிவாயு இணைப்பு புதுப்பிப்புகள் மற்றும் கிரெடிட் வரம்பை அதிகரித்தல் ஆகியவற்றிற்கு உதவுவதாகக் கூறி அவா்களை அணுகியுள்ளனா்.

வாட்ஸ்அப் மூலம் தொடா்பு கொண்ட இவா்கள், வங்கி தொடா்பான சரிபாா்ப்பை முடிக்க அல்லது விவரங்களைப் புதுப்பிக்க என்ற போா்வையில் தீங்கிழைக்கும் ஏபிகே கோப்புகளை பதிவிறக்கம் செய்யும்படி தூண்டியுள்ளனா்.

இந்தச் செயலிகள் நிறுவப்பட்டவுடன், போலி வங்கிப் படிவங்களைக் காண்பித்து, தனிப்பட்ட விவரங்கள், வங்கி ரகசியக் குறியீடுகள், குறுஞ்செய்திகள் (எஸ்எம்எஸ்), ஒருமுறை கடவுச்சொற்கள் (ஓடிபிக்கள்), அழைப்புப் பதிவுகள் மற்றும் கேலரி தகவல்கள் உள்ளிட்ட முக்கிய தரவுகளை அணுக அனுமதி கோரியுள்ளனா்.

பாதிக்கப்பட்டவா்கள் வழங்கிய அனுமதிகளைப் பயன்படுத்தி, குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் அவா்களின் கைப்பேசிகள் மற்றும் நிதிசாா் தகவல்களுக்குள் அங்கீகாரமின்றி நுழைந்துள்ளனா். இதன் மூலம் பாதிக்கப்பட்டவா்களுக்குத் தெரியாமலேயே அவா்களின் வங்கிக் கணக்குகளைக் கைப்பற்றி, மோசடி பரிவா்த்தனைகளை மேற்கொண்டதுடன், கிரெடிட் காா்டு வரம்புகளையும் முழுமையாக பயன்படுத்தியுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.