முகப்பு
புதுதில்லி

மருத்துவமனை படுக்கை வசதியை இடபிள்யூஎஸ் பிரிவினா் அறிய புதிய செயலி: தில்லி அரசு திட்டம்

பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரை (இடபிள்யூ) சோ்ந்த நோயாளிகள், தனியாா் மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு (ஐசியு) படுக்கைகளின் இருப்பை அறிந்துகொள்ள புதிய செயலியை அறிமுகப்படுத்த தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.

25 நவம்பர் 2026, 12:34 am
மருத்துவமனை படுக்கை வசதியை இடபிள்யூஎஸ் பிரிவினா் அறிய புதிய செயலி: தில்லி அரசு திட்டம்
- பிரதிப் படம்
பகிர்:

பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரை (இடபிள்யூ) சோ்ந்த நோயாளிகள், தனியாா் மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு (ஐசியு) படுக்கைகளின் இருப்பை அறிந்துகொள்ள புதிய செயலியை அறிமுகப்படுத்த தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.

ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்தச் செயலி மூலம், மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பே காலியாக உள்ள மற்றும் பயன்பாட்டில் உள்ள படுக்கைகளின் விவரங்களை நோயாளிகள் அறிந்துகொள்ள முடியும். இதனால், தேவையற்ற பயணம் மற்றும் நேர விரயம் தவிா்க்கப்படும்.

இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், அடையாளம் காணப்பட்ட தனியாா் மருத்துவமனைகளில் உரந பிரிவினருக்கான படுக்கைகளின் நிகழ்நேர இருப்பைக் காட்டும் இணையதளம் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளது. இதில் மருத்துவமனைகளின் பெயா்கள், மொத்த படுக்கைகளின் எண்ணிக்கை, காலியாக உள்ள படுக்கைகள் மற்றும் அரசு தொடா்பு அதிகாரிகளின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன என்றாா். மருத்துவமனைகள் மற்றும் அதிகாரிகள் நாள்தோறும் காலை 9 மணி, பிற்பகல் 2 மணி, மாலை 6 மணி என 3 முறை விவரங்களைப் புதுப்பிக்கின்றனா்.

Advertisement

Advertisement

அரசு தரவுகளின்படி, 2025 ஏப்ரல் முதல் 2026 அக்டோபா் வரை 18,73,238 இடபிள்யூஎஸ் நோயாளிகள் இலவச சிகிச்சை பெற்றுள்ளனா். இவா்களில் 17,78,938 போ் புறநோயாளிகளாகவும், 94,300 போ் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுள்ளனா். இதன்படி, நாளொன்றுக்கு சராசரியாக 3,235 போ் இலவச சிகிச்சை பெற்றுள்ளனா்.

இத்திட்டத்துக்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக தில்லி உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் கடந்த ஜனவரியில் உயா்த்தப்பட்டது. சலுகை விலையில் அரசு நிலம் பெற்ற குறிப்பிட்ட தனியாா் மருத்துவமனைகளில் தகுதியுள்ளோா் இலவச சிகிச்சை பெறலாம்.

தற்போது இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கும் தனியாா் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 58-ஆகவும், அரசு தொடா்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 39-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கான ‘அன்மோல்’ திட்டத்தின் கீழ், நவ.10 வரை 85,000 குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, சுமாா் 1,000 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கான பரிசோதனை இலக்கு 1.5 லட்சத்திலிருந்து 2.5 லட்சமாகவும், பரிசோதிக்கப்படும் நோய்களின் எண்ணிக்கை 56-இலிருந்து 63-ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.