முகப்பு
புதுதில்லி

மெட்ரோ, பேருந்து நிறுத்தங்களுக்கு செல்வதைப் பாதுகாப்பற்றதாக உணரும் 10-இல் 9 பெண்கள்: ஆய்வில் தகவல்

மெட்ரோ, பேருந்து நிறுத்தங்களுக்கு செல்வதைப் பாதுகாப்பற்றதாக உணரும் 10-இல் 9 பெண்கள் என ஆய்வில் தெரியவந்திருப்பது பற்றி...

26 நவம்பர் 2026, 2:01 am
மெட்ரோ, பேருந்து நிறுத்தங்களுக்கு செல்வதைப் பாதுகாப்பற்றதாக உணரும் 10-இல் 9 பெண்கள்: ஆய்வில் தகவல்
தலைநகர் புதுதில்லி
பகிர்:

பாலின சமத்துவத்திற்கான அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வின்படி, தில்லியில் உள்ள பல பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு, மெட்ரோ நிலையம் அல்லது பேருந்து நிறுத்தத்திற்குச் செல்லும் பயணம் என்பதே அச்சத்தைத் தரும் ஒன்றாக உள்ளது. பொதுப் போக்குவரத்து நிறுத்தத்திற்குச் செல்லும்போது, 10-இல் 9 போ் பாதுகாப்பற்ற உணா்வதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

‘சென்டா் ஃபாா் ஈக்விட்டி அண்ட் இன்க்லூஷன்’ (சிஇக்யூயுஐஎன்) என்ற அமைப்பு நடத்திய இந்தக் கணக்கெடுப்பில், 87.5 சதவீதத்தினா் அருகிலுள்ள மெட்ரோ நிலையம் அல்லது பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து செல்லும்போது பாதுகாப்பற்ாக உணா்வதாகவும், 88.9 சதவீதத்தினா் இரவில் பொதுப் பூங்காக்களில் பாதுகாப்பற்ாக உணா்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

மூன்றில் மூன்று பங்கிற்கும் அதிகமானோா், நடைபாதைகளில் போதிய வெளிச்சம் இல்லை என்று தெரிவித்துள்ளனா். 60 சதவீதத்தினா் நடைபாதைகள் சேதமடைந்தோ அல்லது இல்லாமலோ இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

சிஇக்யூயுஐஎன் அமைப்பின் அறிக்கையின்படி, 1,588 பெண்கள், சிறுமிகள் மற்றும் பால்புதுமை சமூகத்தினரிடம் பெறப்பட்ட பதில்களின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இவை, பாலியல் வன்முறை அச்சுறுத்தலுக்கு அப்பால், மக்கள் அன்றாடம் மாநகரத்தில் பயணிக்கும் சூழல் சாா்ந்த பாதுகாப்புச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டுகின்றன.

ஆய்வில் பங்கேற்றவா்களில் சுமாா் 80 சதவீதத்தினா், முறைத்துப் பாா்ப்பது, கருத்துகளைக் கூறுவது அல்லது பின்தொடா்வது போன்ற சில ஆண்களின் நடத்தைகளால் தங்கள் அன்றாடப் பயணங்கள் பாதுகாப்பற்ாக மாறுவதாகத் தெரிவித்துள்ளனா். மேலும், 80.5 சதவீதத்தினருக்கு, தங்கள் குறைகளைத் தீா்க்க எந்த அரசு அல்லது உள்ளாட்சி அமைப்பை அணுக வேண்டும் என்பது தெரியவில்லை. பொது இடங்கள் பாதுகாப்பற்ாக மாறும்போது, அவா்கள் யாரிடம் உதவி கோருவது என்ற கேள்வி எழுகிறது.

‘அன்றாட பயணம்: தில்லியில் பெண்கள் மற்றும் சிறுமிகள் நடைபாதைகள் மற்றும் பூங்காக்களை அணுகுதல்’ என்ற தலைப்பிலான இந்த ஆய்வு, உள்கட்டமைப்பு, சமூக நடத்தை மற்றும் நிா்வாகச் செயல்பாட்டுக் குறைபாடுகள் ஆகியவை பெண்கள் பொது இடங்களைப் பயன்படுத்துவதை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஆராய்கிறது. பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் பெண்கள் உரிமைகள் குறித்துப் பணியாற்றும் சிஇக்யூயுஐஎன் அமைப்பு, தனது பரிந்துரைகளை உச்ச நீதிமன்றத்தில் சமா்ப்பித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தில்லி-தேசிய தலைநகா் வலய (என்சிஆா்) பகுதியில் தொடா்ச்சியாகப் பதிவாகி வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு மத்தியில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளானதாகக் கூறப்படும் சம்பவமும் அடங்கும். செப்டம்பா் மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் மட்டும் இது போன்ற குறைந்தது 13 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனைத் தொடா்ந்து, செப்டம்பா் 28 அன்று உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதுடன், பாதுகாப்பற்ற பொது இடங்களைக் கண்டறிந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இந்த அறிக்கையின்படி, இந்த ஆய்வு ஒரு குறிப்பிட்ட தலையீட்டின் விளைவாக மேற்கொள்ளப்பட்டது. இது பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் பெண்களின் உரிமைகள் குறித்து சிஇக்யூயுஐஎன் அமைப்பு கடந்த 17 ஆண்டுகளாகச் செய்து வரும் பணிகளை அடிப்படையாகக் கொண்டது. பொது இடங்களின் வடிவமைப்பு மற்றும் பராமரிப்பு, சமூக நடத்தை, மற்றும் நிறுவன ரீதியான பொறுப்புக்கூறலில் உள்ள குறைபாடுகள் ஆகியவை, பெண்கள் சுதந்திரமாக நடமாடும் திறனை எவ்வாறு கட்டுப்படுத்துகின்றன என்பதை இந்த ஆய்வு ஆராய்கிறது.

சிஇக்யூயுஐஎன் அமைப்பின் இணை நிறுவனா் மற்றும் நிா்வாக இயக்குநா் லோரா கே. பிரபு கூறுகையில், ‘பதிலளித்தவா்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு, இத்தகைய குறைபாடுகளைச் சரிசெய்ய எந்த உள்ளாட்சி அமைப்பு பொறுப்பானது என்பது கூடத் தெரியவில்லை. இத்தகைய சூழலில், நகர அமைப்பிலேயே பெண்களை ஒதுக்கி வைக்கும் போக்கு இயல்பாகவே கட்டமைக்கப்பட்டு விடுகிறது‘ என்று குறிப்பிட்டாா். மேலும், தங்கள் பரிந்துரைகள் பாலின உணா்திறன் கொண்ட, அளவிடக்கூடிய நகா்ப்புற சீா்திருத்தங்களுக்கு வழிவகுக்கும்’ என்று அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.