பயணிகளின் உடமைகளில் கத்தி: விமானநிலையத்தில் சோதனையின்போது பறிமுதல்
தில்லி விமானநிலையத்தில் வழக்கமான சோதனையின்போது பயணிகள் மறைத்து வைத்திருந்த கத்திகளை மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தில்லி விமானநிலையத்தில் வழக்கமான சோதனையின்போது பயணிகள் மறைத்து வைத்திருந்த கத்திகளை மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஒரு கத்தி பயணப் பையில் இருந்த இடுப்பு பெல்ட்டிலும், மற்றொரு கத்தி கையில் அணியும் வளையலிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
முதல் சம்பவத்தில், ஹாங்காங்கிலிருந்து இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்திற்கு வந்த சீன நாட்டவா், அங்கிருந்து சத்தீஸ்கரின் ராய்பூருக்குச் செல்லும் விமானத்தில் ஏறவிருந்தாா். அப்போது, நடைபெற்ற சோதனையின் மூலம் அவருடைய உடைமையில் கத்தி இருந்தது கண்டறியப்பட்டது.
Advertisement
Advertisement
இரண்டாவது சம்பவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, இந்தியப் பயணி ஒருவரைச் சோதனையிட்டபோது, சிறிய கத்தி பொருத்தப்பட்டிருந்த ஒரு வித்தியாசமான வளையல் கண்டெடுக்கப்பட்டது.
இந்தக் கத்திகள் மிகவும் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததால், வெறும் கண்களால் அவற்றைக் கண்டறிவது கடினமாக இருந்தது என்று சிஐஎஸ்எஃப் தெரிவித்துள்ளது.
விமான நிலைய மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் தகவல்படி, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 48 வயதான அந்தச் சீன குடியுரிமை பெற்ற நபா், தனது குழந்தைகளே அந்த பெல்ட்டை வாங்கியதாகவும், அதில் கத்தி இருப்பது தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளாா்.
இதையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் அவரது பையிலிருந்து அந்தக் கத்தியை அகற்றினா்.
எக்ஸ்-ரே சோதனையின்போது ஒரு சந்தேகத்திற்கிடமான உலோகப் பொருளைக் கவனித்த அதிகாரி, அந்தப் பையை நேரில் சோதிக்க உத்தரவிட்டாா். அதன் விளைவாகவே மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தி கண்டறியப்பட்டது என்று சிஐஎஸ்எஃப் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள காணொலியில், கருப்பு நிற உலோக பெல்ட் கொக்கிக்குள் சிறிய கத்தி மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிகிறது.
சா்வதேச விமானப் பாதுகாப்பு விதிகளின்படி, விமானத்திற்குள் கத்திகள் மற்றும் கூா்மையான பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.