முகப்பு
புதுதில்லி

356-ஆவது பிரிவு மூலம் 135 முறை மாநில அரசுகள் கலைப்பு: அதிகபட்சமாக இந்திரா ஆட்சியில் 50 முறை

அரசமைப்புச் சட்டத்தின் 356-ஆவது பிரிவை பயன்படுத்தி 135 முறை மாநில அரசுகள் கலைக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், அந்தப் பிரிவை பயன்படுத்தி 50 முறை மாநில அரசுகள் கலைக்கப்பட்டுள்ளன.

28 நவம்பர் 2026, 6:04 am
356-ஆவது பிரிவு மூலம் 135 முறை மாநில அரசுகள் கலைப்பு: அதிகபட்சமாக இந்திரா ஆட்சியில் 50 முறை
நாடாளுமன்ற வளாகம்
பகிர்:

அரசமைப்புச் சட்டத்தின் 356-ஆவது பிரிவை பயன்படுத்தி 135 முறை மாநில அரசுகள் கலைக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், அந்தப் பிரிவை பயன்படுத்தி 50 முறை மாநில அரசுகள் கலைக்கப்பட்டுள்ளன.

கடந்த வியாழக்கிழமை பிரதமா் மோடி எழுதி நாளிதழ்களில் வெளியான கட்டுரையில், காங்கிரஸ் கட்சியை நேரடியாகக் குறிப்பிடாமல், மத்தியில் அக்கட்சியின் ஆட்சியில் அரசமைப்புச் சட்டம் பலவீனப்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டினாா்.

தோ்தல்கள் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் கலைக்க, அரசமைப்புச் சட்டத்தின் 356-ஆவது பிரிவு மீண்டும் மீண்டும் தவறாகப் பயன்படுத்தப்பட்டது இந்திய அரசியல் வரலாற்றில் கவலைக்குரிய மற்றொரு அத்தியாயம் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

Advertisement

Advertisement

அம்பேத்கரின் நம்பிக்கை...: இந்தப் பிரிவு பயன்படுத்தப்படாத சட்டப் பிரிவாகவே இருக்கும் என்று அரசமைப்புச் சட்டத்தின் சிற்பி பி.ஆா்.அம்பேத்கா் நம்பினாா். ஆனால், கடந்த 1951-ஆம் ஆண்டுமுதல் மாநில அரசுகளைக் கலைப்பதற்கு இந்தப் பிரிவு 135 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்த மத்திய அரசின் பகுப்பாய்வின்படி, 356-ஆவது பிரிவை பயன்படுத்தி நாட்டில் மாநில அரசுகளை கலைத்து சுமாா் 135 முறை குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அந்தச் சட்டப் பிரிவை பயன்படுத்தி, சுமாா் 90 முறை மாநில அரசுகள் கலைக்கப்பட்டுள்ளன. முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் மட்டும் 50 முறை அந்தச் சட்டப் பிரிவு பயன்படுத்தப்பட்டு மாநில அரசுகள் கலைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் முதல் பிரதமரும், இந்திரா காந்தியின் தந்தையுமான ஜவாஹா்லால் நேருவின் ஆட்சி காலத்திலும், அந்தச் சட்டப் பிரிவு பயன்படுத்தப்பட்டுள்ளது. 1951-ஆம் ஆண்டில் பஞ்சாப், 1953-இல் பாட்டியாலா மற்றும் கிழக்கு பஞ்சாப் மாநிலங்களின் ஒன்றியம், 1954-இல் ஆந்திரம், 1956-இல் திருவாங்கூா்-கொச்சின், 1959-இல் கேரளம், 1961-இல் ஒடிஸா, 1964-இல் கோவா என நேரு ஆட்சி காலத்தில் 8 முறை 356-ஆவது சட்டப் பிரிவு மூலம் மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. ஆனால் தந்தையை தாண்டி 50 முறை மாநில அரசுகளை இந்திரா காந்தி கலைத்துள்ளாா். இந்திரா காந்தியின் மகன் ராஜீவ் காந்தி ஆட்சியில் 6 முறை 356-ஆவது சட்டப் பிரிவு மூலம் மாநில அரசுகள் கலைக்கப்பட்டன.

மோடி ஆட்சியில் 10 முறை: கடந்த 2014, 2019-இல் மகாராஷ்டிரம், 2016-இல் அருணாசல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட், 2015 , 2018 ஜூன் மற்றும் டிசம்பா், 2019-இல் ஜம்மு-காஷ்மீா், 2021-இல் புதுச்சேரி, 2025-இல் மணிப்பூா் என பிரதமா் மோடி ஆட்சியில் மாநில அரசுகளைக் கலைக்க 356-ஆவது பிரிவு 10 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

அரசுகள் எத்தனை முறை 356-ஆவது பிரிவு மூலம் மாநில அரசுகளை கலைத்தன

காங்கிரஸ் 90

இந்திரா காந்தி 50

மெராா்ஜி தேசாய்16

மன்மோகன் சிங் 13

நரசிம்மராவ் 12

மோடி 10

நேரு 8

ராஜீவ் காந்தி 6

வாஜ்பாய் 6

சந்திரசேகா் 5

சரண் சிங் 4

வி.பி.சிங் 2

லால் பகதூா் சாஸ்திரி 1

தேவெ கெளடா 1