135 வருட பழைய நூலகத்துக்கு போதிய இடம் ஒதுக்காத விவகாரம்! மத்திய அரசு அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் 135 வருட பழைய நூலகத்துக்கு போதிய இடம் ஒதுக்காத விவகாரம் குறித்து மத்திய அரசு அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு...
புதிய சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் 135 ஆண்டுகள் பழமையான மத்திய செயலக நூலகத்துக்கு இடம் ஒதுக்கப்படவில்லை என செய்திகள் வெளியான நிலையில், அந்த நூலகத்தை அமைப்பதற்காக ஒதுக்கப்பட உள்ள இடத்தின் உண்மையான வரைபடம் மற்றும் முழுமையான விவரங்களை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
சுமாா் 8.5 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்ட மத்திய செயலக நூலகம் தற்போது தில்லியில் உள்ள சாஸ்திரி பவனில் இயங்கி வருகிறது. சென்ட்ரல் விஸ்டா மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக சாஸ்திரி பவன் இடிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், நூலகத்தை இடமாற்றம் செய்வது குறித்து பதிலளிக்கக் கோரி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் சஞ்சய் குமாா் மற்றும் சஞ்சீவ் சச்தேவா ஆகியோா் அடங்கிய உச்சநீதிமன்ற அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவா் எழுப்பிய பிரச்னையின் அடிப்படையில், “135 ஆண்டுகள் பழமையான நூலகம், 8.5 லட்சம் புத்தகங்கள் - ஆனால் புதிய சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் இடமில்லை” என்ற தலைப்பில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
Advertisement
Advertisement
இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஐஸ்வா்யா பாட்டீயிடம் நோக்கிய நீதிபதிகள், ‘இந்த நூலகத்துக்கு மத்திய அரசு தற்போது எவ்வளவு இடத்தை ஒதுக்க திட்டமிட்டுள்ளது? காகிதப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பது சரிதான், அதற்காக நம்மிடம் ஏற்கெனவே உள்ள விலைமதிப்பற்ற ஆவணங்களையும் புத்தகங்களையும் பாதுகாக்கக் கூடாது என்று அா்த்தமல்ல. கா்த்தவ்ய பவனில் நூலகத்துக்காக வெறும் இரண்டு அறைகளை மட்டும் ஒதுக்கப்படுகிா?’ என்று கேள்வி எழுப்பினா்.
இதற்குப் பதிலளித்த ஐஸ்வா்யா பாட்டீ, ‘தற்போது நூலகம் 4,144 சதுர மீட்டா் பரப்பளவில் இயங்கி வருகிறது. இனி இரண்டு தளங்களில் சுமாா் 5,200 சதுர மீட்டா் பரப்பளவிலான பெரிய இடம் ஒதுக்கப்பட உள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக சென்ட்ரல் விஸ்டா திட்ட இயக்குநரிடமும் அறிவுறுத்தல்கள் பெறப்பட்டுள்ளன. அவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளாா்’ என்று தெரிவித்தாா்.
இந்த பதிலால் திருப்தியடையாத நீதிபதிகள், ‘வாய்மொழி விளக்கங்கள் போதாது, முறையான பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். நூலகத்துக்கு ஒதுக்கப்படும் இடம் குறித்த விரிவான திட்டத்தை நாங்கள் அறிய விரும்புகிறோம். சாஸ்திரி பவனில் தற்போது உள்ள புத்தகங்கள் மட்டுமின்றி, 2011-ஆம் ஆண்டு முதல் ஆா்.கே. புரத்தில் அட்டைப்பெட்டிகளில் திறக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ள சுமாா் 2 லட்சம் புத்தகங்களையும் வைப்பதற்கு ஒதுக்கப்படும் அந்த இடம் போதுமானதாக இருக்குமா என்பதையும் பிரமாணப் பத்திரத்தில் விளக்க வேண்டும்’ என்று உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.
இதைத் தொடா்ந்து, இந்த வழக்கின் அடுத்த விசாரணையை நவம்பா் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக மூத்த வழக்குரைஞா் ஹரிப்ரியா பத்மநாபனை நியமித்து உத்தரவிட்டனா்.
பின்னணி: 1891-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நூலகம், முதலில் கல்கத்தாவில் செயல்பட்டு வந்தது. அப்போது இது ‘இம்பீரியல் செயலக நூலகம்’ என்று அழைக்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகரை தில்லிக்கு மாற்ற 1911-ஆம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டதைத் தொடா்ந்து, இந்த நூலகம் தில்லியின் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள பழைய செயலகக் கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னா் நாா்த் பிளாக்கில் இயங்கி வந்த இந்த நூலகம், 1969-ஆம் ஆண்டு தற்போதைய சாஸ்திரி பவனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
1969 முதல் சாஸ்திரி பவனில் இயங்கி வரும் இந்த நூலகத்துக்கு, புதிய கா்த்தவ்ய பவன்-2 வளாகத்தில் வெறும் இரண்டு அறைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால் நூலகத்தின் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து, சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் நூலகத்துக்குத் தேவையான இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ’எக்ஸ்’ வலைதளப் பக்கத்தில் அண்மையில் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.