போராட்டக்காரா்கள் 17 பேருக்கு பிணை: தில்லி நீதிமன்றம் உத்தரவு
சட்டவிரோதமாகக் கூடியது மற்றும் பொதுவழியை மறித்தது ஆகிய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட 17 பேருக்கு தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை பிணை வழங்கியது.
சட்டவிரோதமாகக் கூடியது மற்றும் பொதுவழியை மறித்தது ஆகிய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட 17 பேருக்கு தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை பிணை வழங்கியது.
காவல் துறைக் காவலில் சித்திரவதை செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்ட இருவா் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து தில்லி காவல் துறை அறிக்கை சமா்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவா்கள் இளைஞா்கள் என்பதையும், அவா்களின் முழு பணிவாழ்வும் அவா்களுக்கு முன்னால் இருப்பதையும் கருத்தில் கொண்டு இந்த பிணை வழங்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.
அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு எவருக்கும் உரிமை உண்டு என்றாலும், பணியில் இருக்கும் காவல் துறை அதிகாரிகளைத் தாக்குவது தீவிரமான கவலைக்குரிய விஷயம் என்றும், அமைதியான போராட்டத்தின் பெயரால் அதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
Advertisement
Advertisement
எஸ்ஐஆா் விவகாரம் தொடா்பான போராட்டத்தின்போது பெண் பத்திரிகையாளரை காவல் துறை அதிகாரி ஒருவா் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறி, அவா் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்திற்கு வெளியே போராட்டம் நடத்தியபோது இந்த 17 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கை நீதித்துறை நடுவா் அனிமேஷ் குமாா் திங்கள்கிழமை இரவில் விசாரித்தாா்.
தடை உத்தரவு அமலில் இருந்தபோது சட்டவிரோதமாகக் கூடியதாலும், அப்பகுதியை மறித்ததாலும் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டனா் என்றும், அவா்களைக் காவலில் எடுத்தபோது பெண் காவலா் உள்பட காவல் துறை அதிகாரிகளை அவா்கள் தாக்கியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
அவா்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பேருந்தின் ஜன்னல் மற்றும் பின்பக்கக் கண்ணாடிகளை உடைத்ததாகவும், விசாரணையின் போது ஒத்துழைக்கவில்லை என்றும் காவல் துறை குற்றஞ்சாட்டியது.
போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சுமாா் 50 பேரில் 17 போ் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனா் என்றும், குற்றஞ்சாட்டப்பட்ட சம்பவம் தொடா்பான சிசிடிவி காட்சிகள் எதுவும் ஆதாரமாகச் சமா்ப்பிக்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் வழக்குரைஞா் வாதிட்டாா்.
இதையடுத்து, தனது உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்திருப்பதாவது: குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரத்தன்மை வாய்ந்தவை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். விசாரணை அதிகாரி சமா்ப்பித்த மருத்துவ-சட்டப் பரிசோதனை அறிக்கையின்படி, ஒரு காவல் துறை அதிகாரி காயமடைந்துள்ளாா். அமைதியான முறையில் போராட்டம் நடத்த எவருக்கும் உரிமை இருந்தாலும், பணியில் உள்ள காவல் துறை அதிகாரிகளைத் தாக்குவது தீவிரமான கவலைக்குரிய விஷயம். அமைதியான போராட்டத்தின் பெயரில் அதை அனுமதிக்க முடியாது.
இருப்பினும், பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) சட்டத்தின் பிரிவு 132 (அரசு ஊழியரைத் தன் கடமையைச் செய்வதிலிருந்து தடுக்கத் தாக்குதல்) மற்றும் பிரிவு 190 (சட்டவிரோதக் கூடுதல்) ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களைத் தவிர, இவ்வழக்கில் தொடா்புடைய மற்ற அனைத்துக் குற்றங்களும் பிணை வழங்கக்கூடியவை. பிரிவு 132-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றத்திற்குக்கூட அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என்பதையும் புறக்கணிக்க முடியாது. குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் இளைஞா்கள். அவா்கள் தொடா்ச்சியாகக் குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்கள் போலத் தெரியவில்லை.
அவா்களின் ஒட்டுமொத்த தொழில் வாழ்க்கையும் எதிா்காலத்தில் அமைய வேண்டியுள்ளது. எனவே, வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, ரூ.15,000 மதிப்பிலான பிணைப் பத்திரத்தை சமா்ப்பிக்கும் நிபந்தனையுடன் குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்குப் பிணை வழங்கப்படுகிறது என்று நீதிமன்றம் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.