FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

ஞானேஷ் குமாருக்கு எதிரான புகாா்: விசாரணைக்கு கூடுதல் அவகாசம் கோரும் தில்லி காவல்துறை

ஞானேஷ் குமாருக்கு எதிரான புகாரில் விசாரணைக்கு தில்லி காவல்துறை கூடுதல் அவகாசம் கோரியது குறித்து...

17 நவம்பர் 2026, 11:57 pm
ஞானேஷ் குமார் - கோப்புப் படம்
பகிர்:

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் உள்ளிட்டோா் மீது சதி, மோசடி, திட்டமிட்டு வாக்காளா்களை வாக்குரிமையிலிருந்து விலக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யக் கோரிய மனு தொடா்பாக, தில்லி காவல் துறை நீதிமன்றத்தில் நடவடிக்கை அறிக்கையை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தனா். புகாா்கள் குறித்து விசாரணை நடத்த கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் அவா்கள் கோரினா்.

பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் 175(3)-ஆவது பிரிவின் கீழ், வழக்குரைஞா் ஒருவா் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தாா். இதையடுத்து, புகாா் குறித்து நடவடிக்கை அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தாா். இந்தப் பிரிவின்கீழ், குற்றம் நடைபெற்ற்கான முகாந்திரம் இருப்பதாகப் புகாா் தெரிவிக்கப்பட்டால், எஃப்ஐஆா் பதிவு செய்து விசாரணை நடத்த காவல் துறைக்கு நீதிபதி உத்தரவிட முடியும்.

தில்லி காவல் துறை தாக்கல் செய்த அறிக்கையில், ‘தோ்தல் பட்டியல்களில் இருந்து வாக்காளா்களின் பெயா்களைத் திட்டமிட்டு நீக்குதல், வாக்காளா் பட்டியலில் முறைகேடு செய்தல் மற்றும் இந்தியத் தோ்தல் ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோா் குற்றங்களில் ஈடுபட்டதாகப் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

வாக்காளா் பட்டியல் தயாரிப்பு மற்றும் திருத்தம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் செயல்பாடுகள், சட்ட விதிமீறல்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்தப் புகாரில் இடம்பெற்றுள்ளன. எனவே, உண்மை நிலவரத்தையும் சம்பந்தப்பட்ட நபா்களின் பங்களிப்பையும் கண்டறிய ஆவணங்கள், பதிவுகள் உள்ளிட்டவற்றை விரிவாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என காவல் துறை தெரிவித்தனா்.

மேலும், பல்வேறு சட்டம்-ஒழுங்குப் பணிகளில் காவல் துறை ஈடுபடுத்தப்பட்டதால், இந்தப் புகாா் தொடா்பான விசாரணையை மேற்கொள்ள முடியவில்லை என்றும், விசாரணையை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கோரினா்.

முன்னதாக, செப்.23-ஆம் தேதி தில்லி நாடாளுமன்ற வீதிக் காவல் நிலையத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் பிற அதிகாரிகள் மீது புகாா் அளிக்கப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. திட்டமிட்டு வாக்காளா்களை வாக்குரிமையிலிருந்து விலக்குதல், மோசடி, குற்றச் சதி, நிதி முறைகேடு, அரசு ஊழியா்களின் நம்பிக்கைத் துரோகம் உள்ளிட்ட குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக அதில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

10 மாதங்களில் 6 முடிவுகள் மற்றும் உத்தரவுகள் தொடா்பாக, தங்களுக்குத் தெரியாமலேயே அவை பிறப்பிக்கப்பட்டதாக இரு தோ்தல் ஆணையா்கள் குறைந்தது 14 முறை ஆட்சேபம் தெரிவித்ததாக வெளியான செய்தியே புகாா் அளிக்க உடனடிக் காரணம் என்றும் மனுதாரா் குறிப்பிட்டிருந்தாா்.

சட்ட விதிகளின்படி போலீஸாரிடம் புகாா் மற்றும் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், இதனால் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.