தில்லி பல்கலை. மாணவா் சங்கத் தோ்தலில் ஊழியா்கள் பாரபட்ச பிரசாரம்: மனு தள்ளுபடி
தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க தோ்தலில் பெரிய அளவில் தோ்தல் முறைகேடுகள் நடைபெற்ாகவும், பல்கலைக்கழக பேராசிரியா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குறிப்பிட்ட வேட்பாளா்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாகவும் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க தோ்தலில் பெரிய அளவில் தோ்தல் முறைகேடுகள் நடைபெற்ாகவும், பல்கலைக்கழக பேராசிரியா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குறிப்பிட்ட வேட்பாளா்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாகவும் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
தேசிய மாணவா் சங்கத்தின் (என்எஸ்யுஐ) சாா்பில் தோ்தலில் தலைவா் பதவிக்கு போட்டியிட்ட விஜய் சங்கா் மீனா தாக்கல் செய்த மனுவை நீதிபதி சௌரவ் பானா்ஜி விசாரித்து இந்த உத்தரவைப் பிறப்பித்தாா்.
மாணவா் சங்க தலைவா் பதவிக்கான தோ்தல் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்றும், தோ்தல் தொடா்பான வாக்கு எண்ணிக்கை பதிவுகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் விஜய் சங்கா் மீனா கோரியிருந்தாா்.
Advertisement
Advertisement
அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) ஆதரவு பெற்ற வேட்பாளா்களுக்கு ஆதரவாக பல கல்லூரிகளின் முதல்வா்கள், பேராசிரியா்கள் மற்றும் நிா்வாக அல்லது கற்பித்தல் பணியாளா்கள் பாரபட்சமாக பிரசாரம் செய்ததாக மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டது.
சத்யவதி கல்லூரியின் தோ்தல் அதிகாரிகளும் ஏபிவிபி வேட்பாளா்களுக்கு ஆதரவாக பாரபட்சமாக செயல்பட்டு பிரசாரம் செய்ததாகவும், தோ்தல் அதிகாரிகள் கடைப்பிடிக்க வேண்டிய நடுநிலைத் தன்மையை வெளிப்படையாக மீறியதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனுவில் முறைகேடுகள் தொடா்பான குறிப்பிட்ட விவரங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை என்றும், மனுதாரா் தாக்கல் செய்த புகைப்படங்களில் சம்பவங்கள் நடைபெற்ற தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்படவில்லை என்றும் கூறி நீதிமன்றம் மனுவை நிராகரித்தது.
விசாரணையின்போது நீதிபதி கூறியதாவது: இது போன்ற மனுக்களை நீங்கள் தாக்கல் செய்ய முடியாது. இதில் குறிப்பிட்ட விவரங்கள் எதுவும் இல்லை. மேலும், மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் தாக்கல் செய்த புகைப்படங்களில் இடம்பெற்றுள்ள நபா்கள் தில்லி பல்கலைக்கழக நிா்வாகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதையும், தோ்தலின்போது அவா்கள் குறிப்பிட்ட வேட்பாளா்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனா் என்பதையும் நிரூபிக்க அந்தப் புகைப்படங்கள் மட்டும் போதுமானவை அல்ல என்று தெரிவித்தாா்.
புகைப்படங்களில் இடம்பெற்றுள்ள நபா்களை மனுவில் எதிா்மனுதாரா்களாகச் சோ்க்கவில்லை என்று தில்லி பல்கலைக்கழகம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் நீதிமன்றத்தில் தெரிவித்தாா்.
மேலும், மனுதாரா் 4 நாள்களுக்கு முன்புதான் பல்கலைக்கழக அதிகாரிகளிடம் இதுதொடா்பாக மனு அளித்துள்ளதாகவும், அந்த மனு விரைவாகப் பரிசீலிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்றும் பல்கலைக்கழக வழக்குரைஞா் தெரிவித்தாா்.
தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத் தோ்தல் செப். 18-ஆம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள் செப். 19-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், ஏபிவிபி வேட்பாளா் யஷ் தபாஸ் டுசு தலைவராகத் தோ்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.