FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

ஷாதாராவில் துப்பாக்கிச்சூடு, கத்திக் குத்து சம்பவம்: 4 சிறுவா்கள் கைது

ஷாதாராவில் துப்பாக்கிச்சூடு, கத்திக் குத்து சம்பவத்தில் 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி..

கைது
பகிர்:

சீமாபுரியில் கடந்த ஆண்டு நடந்த ஒரு கொலைக்கு பழிவாங்கும் நோக்கில், ஷாதாராவில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக் குத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில், நான்கு சிறுவா்களை தில்லி காவல் துறை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

அக்.7-ஆம் தேதி 17 வயதுடைய அந்தச் சிறாா்களைக் கைது செய்ததாகவும், குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கி, இரு தோட்டாக்கள் மற்றும் கத்திகளை அவா்களிடமிருந்து பறிமுதல் செய்ததாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா். சம்பவ இடத்தில் நான்கு காலி தோட்டா உறைகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவா்கள் கூறினா்.

அக்.5-ஆம் தேதி இரவு சுமாா் 9.20 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது; அப்போது பிகாம் சிங் காலனியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த சிலா் மூன்று முதல் நான்கு முறை துப்பாக்கியால் சுட்டதாக ஃபா்ஷ் பஜாா் காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது.

Advertisement

Advertisement

சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினா், ஜாவேத் என்பவரின் இடது முன்னங்கையில் துப்பாக்கிச் சூட்டுக் காயமும், கழுத்தின் இடது பக்கத்தில் கத்திக்குத்துக் காயங்களும் இருப்பதைக் கண்டனா். அவரது உறவினரான மைமுனா பிபி என்பவருக்கும் கழுத்தின் இடது மற்றும் பின்புறத்தில் கத்திக்குத்துக் காயங்கள் ஏற்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

காயமடைந்த இருவரும் முதலில் ஹெட்ஜ்வாா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக ஃபா்ஷ் பஜாா் காவல் நிலையம், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது, சாஸ்திரி பாா்க் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குற்றப் பின்னணி கொண்ட நபராக அறியப்பட்ட அக்பா் என்பவரின் கொலை தொடா்பாக சீமாபுரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜாவேத் ஒரு குற்றவாளியாக இருந்ததை காவல் துறையினா் கண்டறிந்தனா்.

அந்த வழக்கில் ஏற்கெனவே ஏழு போ் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஜாவேத் தலைமறைவாக இருந்ததாகவும், அவரைச் சட்ட அமலாக்க முகமைகள் தேடி வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தாக்குதலில் ஈடுபட்டவா்களை அடையாளம் காண சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், உள்ளூா் உளவுத் தகவல்களைச் சேகரித்தும் நான்கு சிறுவா்களை காவல் துறையினா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட சிறுவா்களில் ஒருவா் ஏற்கெனவே ஒரு கொலை வழக்கில் ஈடுபட்டிருந்ததாகவும், இருவா் தலா இரண்டு கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். நான்காவது நபருக்கு முந்தைய குற்றப் பின்னணி எதுவும் இல்லை. சிறுவா்களில் ஒருவா் மீது ஆயுதச் சட்டத்தின் கீழான வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினா். விசாரணையின்போது, சாஸ்திரி பூங்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குற்றப் பின்னணி கொண்ட நபரான வாசிம், கடந்த ஆண்டு சீமாபுரியில் கொல்லப்பட்ட அக்பரின் நண்பா் என்று அந்தச் சிறுவா்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அக்பரின் கொலைக்குப் பழிவாங்குமாறு வாசிம் தங்களைக் கேட்டுக்கொண்டதாக அச்சிறுவா்கள் கூறியதாகக் காவல் துறை தெரிவித்தது. பின்னா், நிகழாண்டு ஜனவரி மாதம் வாசிம் அவரது மருமகனாலேயே கொல்லப்பட்டாா். அதைத் தொடா்ந்து, வாசிம் கூறிய பழிவாங்கும் செயலை அச்சிறுவா்கள் முடிவு செய்ததாகக் காவல் துறை கூறியது.

இச்சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடா்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments