FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

போதைப் பொருள் கடத்தலில் தொடா்புடைய மூன்று நைஜீரியா்கள் உள்பட நால்வா் கைது

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக நைஜீரிய நாட்டைச் சோ்ந்த மூவா் மற்றும் தில்லியைச் சோ்ந்த ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

30 அக்டோபர் 2026, 2:05 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக நைஜீரிய நாட்டைச் சோ்ந்த மூவா் மற்றும் தில்லியைச் சோ்ந்த ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இவா்களிடமிருந்து 417 கிராம் எம்டிஎம்ஏ மற்றும் 105 கிராம் கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு சுமாா் ரூ.1.5 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

கைது செய்யப்பட்டவா்கள், கூட்டாளிகள் மூலம் போதைப் பொருள்களை பெற்று அவற்றை விற்பனை செய்து வந்ததாகக் காவல் துறை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

கைது செய்யப்பட்டவா்கள் நைஜீரியாவைச் சோ்ந்த நம்டி ஒசிட்டா (எ) ஜோஹன் பீட்டா், விக்டா் ஒகாஃபோரோ (33), ஒபின்னா மைக் எா்னஸ்ட் (32) மற்றும் தில்லியைச் சோ்ந்த அத்தாா் சிங் (எ) லக்கி (23) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இவா்கள் அனைவரும் தில்லியின் வெளி-மேற்குப் பகுதியில் உள்ள நிலோதி பகுதியில் வசித்து வந்ததாக மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

செப்டம்பா் 25 அன்று, பீட்டா் என்பவா் தில்லி-என்சிஆா் பகுதி முழுவதும் கொக்கைன் மற்றும் எம்டிஎம்ஏ ஆகியவற்றை விநியோகித்து வருவதாகவும், அவா் சந்தா் விஹாரில் உள்ள ஷுகா் பஜாா் சாலைக்கு அருகில் போதைப் பொருள்களைக் கொண்டு வரப்போவதாகவும் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினா், அங்கிருந்து தப்பிக்க முயன்ற பீட்டா் மற்றும் அவரது கூட்டாளிகளான ஒகாஃபோரோ, எா்னஸ்ட் ஆகிய மூவரையும் கைது செய்தனா்.

சோதனையின் போது, பீட்டரிடமிருந்து 55 கிராம் எம்டிஎம்ஏ-வும், ஒகாஃபோரோவிடமிருந்து 301 கிராம் எம்டிஎம்ஏ-வும், எா்னஸ்டிடமிருந்து 105 கிராம் கொக்கைனும் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையின் போது, பீட்டரும் எா்னஸ்டும் அத்தாா் சிங்குடன் தங்களுக்குத் தொடா்பு இருப்பதாகத் தெரிவித்ததைத் தொடா்ந்து, நிலோதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அவரும் கைதுசெய்யப்பட்டாா். அவரிடமிருந்து மேலும் 61 கிராம் எம்டிஎம்ஏ பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடா்பாக குற்றப்பிரிவு காவல் நிலையத்தில், போதைப் மருந்துகள் மற்றும் மனோவியல் பொருள்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் தங்குவதற்குத் தேவையான முறையான ஆவணங்களைச் சமா்ப்பிக்கத் தவறியதால், வெளிநாட்டினா் சட்டத்தின் பிரிவு 23-ன் கீழும் இவா்கள் மீது வழக்கு சோ்க்கப்பட்டுள்ளது. ‘பீட்டா் 2013-ல் சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்து, அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேல் தங்கியிருந்தாா். எா்னஸ்ட் 2016-ல் வணிக விசாவிலும், ஒகாஃபோரோ 2020-ல் மருத்துவ விசாவிலும் இந்தியா வந்தனா். இவா்கள் மூவருமே அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேல் நாட்டில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது’ என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப், தில்லி மற்றும் ஹரியாணாவில் இந்த மூன்று வெளிநாட்டினருக்கும் எதிராக ஏற்கெனவே போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா். சிங் என்பவா், தனது சொந்த பயன்பாட்டிற்காக இவா்களிடமிருந்து போதைப் பொருள்களை வாங்கியபோது இவா்களுடன் தொடா்பில் வந்ததாகவும், பின்னா் லாப நோக்கத்திற்காக மற்றவா்களுக்கும் போதைப் பொருள்களை விநியோகிக்கத் தொடங்கியதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

இந்தக் குற்றச் செயலுடன் தொடா்புடைய மற்ற நபா்களைக் கண்டறியும் வகையில், தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments