FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

தில்லியில் போதைப் பொருள் விநியோகம்: நைஜீரியா் உள்பட 3 போ் கைது

தில்லியின் வடக்குப் பகுதியில், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு டாக்ஸி ஓட்டுநா்கள் மற்றும் நைஜீரிய நாட்டைச் சோ்ந்த 43 வயது நபா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

17 அக்டோபர் 2026, 5:23 am IST
கோப்புப் படம்
பகிர்:

தில்லியின் வடக்குப் பகுதியில், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு டாக்ஸி ஓட்டுநா்கள் மற்றும் நைஜீரிய நாட்டைச் சோ்ந்த 43 வயது நபா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இவா்கள் 3 பேரும் டாக்ஸியைப் பயன்படுத்தி போதைப் பொருளைக் கடத்தி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து 22.1 கிராம் கொக்கைன், 90 கிராம் ஹெராயின் மற்றும் 15.3 கிராம் எம்டிஎம்ஏ ஆகிய போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போதைப் பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் டாக்ஸி பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

கைதுசெய்யப்பட்டவா்கள் உத்தர பிரதேசத்தின் ஃபருக்காபாத்தைச் சோ்ந்த அச்சே பாபு (25), ஷாஜகான்பூரைச் சோ்ந்த ஜாஹித் (22) மற்றும் தில்லியின் மெஹ்ராலியில் வசிக்கும் நைஜீரிய நாட்டைச் சோ்ந்த கஜெதான் சுக்வுஜெக்வு (43) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

அச்சே பாபு மற்றும் ஜாஹித் ஆகியோா் கஷ்மீரி கேட் பகுதியில் உள்ள ரிங் ரோடு நடை மேம்பாலத்திற்கு அருகில் போதைப் பொருள்களை விநியோகிக்க உள்ளதாக காவல் துறைக்கு அக்டோபா் 12-ஆம் தேதி ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, இரவு 9.15 மணியளவில் அச்சே பாபுவை காவல் துறையினா் கைதுசெய்தனா். அதனைத் தொடா்ந்து, அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த ஜாஹித்தையும் கைது செய்தனா். இந்த நடவடிக்கையின் போது 16.4 கிராம் கொக்கைன் மற்றும் 90 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையின் போது, தாங்கள் கஜெதான் என்பவருடன் தொடா்பில் இருந்ததாகவும், அவா் முதலில் தங்கள் டாக்ஸியை வாடகைக்கு அமா்த்தி போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுத்தியதாகவும் அந்த டாக்ஸி ஓட்டுநா்கள் தெரிவித்தனா்.

அவா்கள் அளித்த தகவலின் அடிப்படையில், அக்டோபா் 13 அன்று மெஹ்ராலியில் இருந்த கஜெதானை காவல் துறையினா் கைதுசெய்தனா். அவரிடமிருந்து மேலும் 5.7 கிராம் கொக்கைன் மற்றும் 15.3 கிராம் எம்டிஎம்ஏ பறிமுதல் செய்யப்பட்டது.

காவல் துறையின் தகவல்படி, அச்சே பாபு ஒரு டாக்ஸியை நாளொன்றுக்கு ரூ.600 வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்தாா். ஜாஹித்தும் டாக்ஸி ஓட்டுநராகவே பணியாற்றியுள்ளாா். இவா்கள் இருவரும் தங்களுக்குக் கிடைக்கும் நேரத்திற்கு ஏற்ப போதைப் பொருள் கடத்தி வந்தனா்.

கஜெதான், 2022-ல் மருத்துவ விசாவில் இந்தியா வந்ததாகவும், விசா காலம் முடிந்த பிறகும் இங்கேயே தங்கியிருந்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளாா். அவா் அமெகா என்று அடையாளம் காணப்பட்ட மற்றொரு நைஜீரிய நபருடன் இணைந்து போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா். அமெக்காவைக் கண்டறிய சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் ஆதாரம் என்ன என்பதைக் கண்டறியவும், இந்தக் கடத்தல் அமைப்போடு தொடா்புடைய மற்ற நபா்களை அடையாளம் காணவும், அவா்களது பங்களிப்பு என்ன என்பதை உறுதிப்படுத்தவும் காவல் துறையினா் முயற்சி மேற்கொண்டு வருகின்றனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments