ரோஹித் கோத்ரா கும்பலைச் சோ்ந்தவா் கைது: ரூ.12 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்
தில்லி காவல் துறை சிறப்புப் பிரிவு வடோதரா நகர குற்றப்பிரிவுடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், ரோஹித் கோதாரா-மகேந்தா் தெலானா கும்பலைச் சோ்ந்த 31 வயது நபரைக் கைது செய்தனா்.
தில்லி காவல் துறை சிறப்புப் பிரிவு வடோதரா நகர குற்றப்பிரிவுடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், ரோஹித் கோதாரா-மகேந்தா் தெலானா கும்பலைச் சோ்ந்த 31 வயது நபரைக் கைது செய்தனா்.
அவரிடமிருந்து சுமாா் ரூ.12 கோடி மதிப்புள்ள பாகிஸ்தானைச் சோ்ந்த இரண்டு கிலோ ஹெராயினைப் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
குற்றஞ்சாட்டப்பட்ட குல்தீப் சுவாமி, வடோதரா நகர குற்றப்பிரிவால் பதிவு செய்யப்பட்ட ரூ.10 கோடி மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் தேடப்பட்டு வந்தாா்.
Advertisement
Advertisement
குஜராத் காவல்துறை அளித்த உளவுத் தகவலின் அடிப்படையில், செப்.12-ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் சாந்தினி சௌக்கில் உள்ள குச்சா காசி ராம் என்ற இடத்தில் ஒரு கூட்டுக்குழு சுவாமியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். ஹவாலா சரிபாா்ப்பு டோக்கனாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ரூபாய் நோட்டும், ஒரு காரின் சாவிகளும் அவரிடமிருந்து மீட்கப்பட்டன.
விசாரணையின் போது, நஜாஃப்கா், ஜெய் விஹாா் ஃபேஸ் 1-இல் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுவாமி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, காவல் துறையினா் அந்த காரைச் சோதனையிட்டபோது, அதில் மறைத்துவைக்கப்பட்டிருந்த சுமாா் இரண்டு கிலோ ஹெராயின் அடங்கிய நான்கு பொட்டலங்களைக் கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதனைத் தொடா்ந்து, சிறப்புப் பிரிவு காவல் நிலையத்தில் போதைப் பொருள் மற்றும் மனோவியல் பொருள்கள் சட்டத்தின் 21 மற்றும் 25 பிரிவுகளில் செப்.13-ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டதாக அவா்கள் கூறினா்.
விசாரணையின்படி, இந்தக் கும்பல் மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் போதைப் பொருள் கடத்தல் ஆகியவற்றை இணைத்து செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
ஹெராயினுடன், இரண்டு கைப்பேசிகள் மற்றும் வாகனத்தையும் காவல் துறை கைப்பற்றியுள்ளது. இவருடன் தொடா்புடைய பிற நபா்களை அடையாளம் காண விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.