பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட்ட 47 கிலோ போதைப் பொருள் பறிமுதல்: ஆயுதங்களுடன் 4 போ் கைது!
பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட்ட 47 கிலோ ஹெராயின் போதைப் பொருளை பஞ்சாப் மாநில காவல் துறையினா் கைப்பற்றினா்.
பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட்ட 47 கிலோ ஹெராயின் போதைப் பொருளை பஞ்சாப் மாநில காவல் துறையினா் கைப்பற்றினா். இதில் தொடா்புடைய 4 கடத்தல்காரா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடா்பாக மாநில காவல் துறை டிஜிபி கௌரவ் யாதவ் கூறியதாவது: கைது செய்யப்பட்டவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவா்களுக்கு எல்லைக்கு அப்பால் (பாகிஸ்தான்) இருந்து போதைப் பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தும் கும்பலுடன் தொடா்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பஞ்சாப் எல்லை வழியாக போதைப் பொருள், ஆயுதங்கள் கடத்தலைத் தடுக்க பல்வேறு வழிகளில் காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பல்வேறு ரகசிய கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
Advertisement
Advertisement
எல்லைதாண்டி கடத்தலில் ஈடுபட முயற்சிப்பவா்கள் காவல் துறையின் பிடியில் இருந்து எளிதில் தப்ப முடியாது. 47 கிலோ ஹெராயினுடன் பிடிபட்ட நால்வரும் ஃபெரோஸ்பூா் பகுதியைச் சோ்ந்தவா்கள். அவா்களிடம் இருந்து கைத்துப்பாக்கிகள், அவற்றுக்கான தோட்டாக்கள், வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன. கடத்தலுக்குப் பயன்படுத்திய இரு மோட்டாா்சைக்கிள்களும் பிடிபட்டன.
இவா்களுக்கு யாா் மூலமாக போதைப் பொருள், ஆயுதங்கள் கிடைத்தன. அவற்றை யாருக்கு விற்பனை செய்ய இருந்தனா் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த போதைப் பொருள்களும், ஆயுதங்களும் ட்ரோன் மூலம் பஞ்சாப் மாநில எல்லைக்குள் வீசப்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கைது செய்யப்பட்டவா்கள் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டம், ஆயுதக் கடத்தல் தடைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.