FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

போதைப் பொருள் விற்பனைக்கு கடிவாளம்

நுகர்வோர் தேவை தொடர்ந்து இருக்கும் வரை, போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்ந்து நடைபெறும்.

18 செப்டம்பர் 2026, 4:23 am IST
- சித்திரிப்பு
பகிர்:

தமிழ்நாட்டில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டு அரை நூற்றாண்டு கடந்துவிட்ட இன்றைய சூழலில், ஆண்களில் 29.2% பேரும், பெண்களில் 0.4% பேரும் போதையூட்டும் மதுபானங்களை அருந்துகின்றனர் என்றும், தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் 1.16% பேர் கஞ்சா, அபின், ஹெராயின் போன்ற போதைப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர் என்றும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

போதைக் கலாசாரம் தமிழ்நாட்டில் வேகமாக பரவிவருவதை கடந்த சில ஆண்டுகளாக காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களின் அளவு, கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆகியவை வெளிப்படுத்துகின்றன.

2021 முதல் 2024 வரையிலான நான்கு ஆண்டுகளில் 93,000 கிலோ கஞ்சா, 43 கிலோ ஹெராயின், 93 கிலோ ஹஷிஷ், 2.5 லட்சத்துக்கும் அதிகமான போதை மாத்திரைகள் தமிழ்நாடு காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டு, 60,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி செல்லும் சிறார்களுக்கென தயாரிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்பட்ட 500 கிலோ கஞ்சா சாக்லெட்டுகளும் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

20-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை சென்னை போன்ற பெருநகரங்களில் அரிதாக நடைபெறும் குற்றச் செயலாக இருந்தது. அதற்கென தனிச்சட்டம் எதுவும் அக்காலகட்டத்தில் இல்லை. இந்தச் சூழலில், 1963-ஆம் ஆண்டு நிகழ்ந்த சம்பவம் ஒன்று சென்னை நகரில் போதைப் பொருள்கள் தொடர்பான குற்றங்களைக் கண்காணித்து, நடவடிக்கை எடுக்க 'சிறப்பு போதைப் பொருள் உளவுப் பிரிவு' தேவை என்பதை தமிழ்நாடு அரசுக்கு உணர்த்தியது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள ஒரு மடத்தை நிர்வகித்து வந்த மஹந்த் கெüசல்யா தாஸ் என்பவர் ஒரு மரப்பெட்டியில் மறைத்து வைத்திருந்த 3.96 கிலோ கஞ்சாவை சென்னை காவல் துறையினர் கைப்பற்றி, கஞ்சா வைத்திருந்த குற்றத்துக்காக அவரை 1963-ஆம் ஆண்டு மார்ச் 22-ஆம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த 8-ஆவது பிரசிடென்சி மாஜிஸ்திரேட், எதிரிக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், 50 ரூபாய் அபராதமும் விதித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் எதிரி செய்த மேல்முறையீடுகளிலும், எதிரிக்கு வழங்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கில் காவல் துறையினர் கைப்பற்றிய கஞ்சா எங்கிருந்து, யாரால், எப்படி சென்னைக்கு கொண்டுவரப்பட்டது என்பது குறித்து புலன் விசாரணையில் துப்பு துலக்கப்படவில்லை என நீதிமன்ற விசாரணையின்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சென்னை நகரில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கிவைத்தல், விற்பனை செய்தல் போன்றவற்றைத் தீவிரமாகக் கண்காணிக்க 1963-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 'சிறப்பு போதைப் பொருள் உளவுப் பிரிவு' உருவாக்கப்பட்டு, சி.பி.சி.ஐ.டி.யின் கட்டுப்பாட்டில் செயல்படத் தொடங்கியது. அந்த அமைப்பானது பின்னர் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டு, 'போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு சி.ஐ.டி.' என்ற பெயரில் தற்போது செயல்பட்டு வருகிறது.

போதைப் பொருள் கடத்தல், பதுக்கிவைத்தல், விற்பனை செய்தல் தொடர்பான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்காக 1985-ஆம் ஆண்டில் 'போதைப் பொருள்கள் மற்றும் மனமயக்கப் பொருள்கள் சட்டம்' இந்திய நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது. இருப்பினும், போதைப்பொருள் விற்பனை நம் நாட்டில் கட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலை நிலவுகிறது.

போதைப் பொருள்களை விற்பனை செய்யும் சாலையோர சில்லறை விற்பனையாளர்களைக் கைது செய்து, அவர்களிடமுள்ள போதைப் பொருள்களைப் பறிமுதல் செய்வதன்மூலம் போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுத்துவிட முடியாது. போதைப் பொருள் விற்பனை சங்கிலியின் கடைசி நிலையில் இருக்கும் சில்லறை விற்பனையாளர் கைது செய்யப்பட்டால், அவரது இடத்தில் மற்றொரு புதிய சில்லறை விற்பனையாளர் போதைப் பொருள் விற்பனைப் பணியை மேற்கொண்டு, போதைப் பொருள் பயனாளிகளைத் திருப்திப்படுத்துகிற கள நிலவரம் தொடர்கிறது.

நிதி நிர்வாகம், போதைப் பொருள் கொள்முதல், பதுக்கிவைத்தல், கடத்தல், மொத்த விநியோகம், சில்லறை விற்பனை, ரகசிய பணப் பரிமாற்றம் என ஒரு பெரிய வணிக நிறுவனத்தைப் போன்று பல அடுக்குகளைக் கொண்ட கட்டமைப்புடன் போதைப் பொருள் வணிகம் நடைபெற்று வருகிறது. போதைப் பொருளை விநியோகம் செய்பவரை மட்டுமே சில்லறை விற்பனையாளர் அறிவர். அதனால், போதைப் பொருள் விற்பனை வலைப்பின்னலின் முழு விவரங்களை பல நேரங்களில் புலன் விசாரணையில் கண்டறிய முடிவதில்லை.

போதைப் பொருள் வணிகத்துக்கு வளர்ந்துவரும் தொழில்நுட்பம் பல வகையில் உதவுகிறது. 'டார்க்நெட்'டில் செயல்படும் சட்ட விரோத இணையவழிச் சந்தைகள் போதைப் பொருள் வணிகத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் தங்களது அடையாளத்தையும், இருப்பிடத்தையும் மறைத்து, போதைப் பொருள் வணிகம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் போதைப் பொருள் வணிகத்தில் மேற்கொள்ளப்படும் சட்ட விரோத பணப் பரிமாற்றத்துக்கு 'கிரிப்டோகரன்சி' பயன்படுத்தப்படுகிறது. இதனால், போதைப் பொருள் வணிகத்தின் அளவை வெளிப்படையாகக் கணக்கிட முடியாத நிலை நிலவுகிறது.

உலகின் முக்கிய போதைப் பொருள் உற்பத்தி பகுதிகளுக்கு இடையிலும், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் வழித்தடத்திலும் இந்தியா அமைந்திருக்கிறது. இதனால், போதைப் பொருள் விற்பனை இந்திய மாநிலங்களிடையே பரவிவரும் சூழல் நிலவுகிறது. உலகில் முக்கியமான போதைப் பொருள் நுகர்வுச் சந்தைகளில் ஒன்றாகவும் இந்தியா திகழ்கிறது.

போதைப் பொருளை ஒரு நபர் பயன்படுத்துவதால், அவரது உடல் நலன் மற்றும் மன நலன் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அது அவரது குடும்பத்தினர் அனைவரின் வாழ்வைச் சீரழித்து விடுகிறது. குறிப்பாக, மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே பரவும் போதைப் பழக்கம் எதிர்கால சமுதாயத்தையே பலவீனமாக்கி விடும்.

கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட வன்கொடுமைகள் நிகழ்வதற்கு போதைப் பழக்கம் துணை போகிறது. போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைக்கும் சட்ட விரோதமான பணத்தை சட்டபூர்வமான வருமானம் போன்று காட்டும் 'பணச் சலவை' முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்துக்குள் குற்றச் செயல் மூலம் ஈட்டப்படும் பணம் நுழைகிற அபாயமும் ஏற்படுகிறது.

போதைப் பொருள் வணிகத்தின் நிதி நிர்வாகம், போதைப் பொருள் கொள்முதல், தேவையான பகுதிகளுக்கு போதைப் பொருளைக் கடத்துகின்ற செயலைக் கண்காணித்தல், சில்லறை விற்பனையாளர்களுக்கு போதைப் பொருளை வழங்கும் மொத்த விநியோக வலையமைப்பு எனப் பல நிலைகளில் இயங்கும் போதைப் பொருள் வணிகத்தின் அச்சாணிகளை அடையாளம் கண்டறிந்து, அவற்றைச் செயலிழக்கச் செய்வதே போதைப் பொருள் வணிகத்துக்குப் போடும் கடிவாளமாகும்.

தமிழ்நாட்டில் சுமார் 9 லட்சம் பேர் போதைப் பொருள் பழக்கம் உடையவர்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவர்களில் கணிசமான சதவீதத்தினர் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள். அத்தகைய நபர்களை அடையாளம் கண்டறிந்து, அவர்கள் இயல்பான வாழ்க்கை முறைக்குத் திரும்புவதற்குத் தேவையான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அதற்கான முயற்சிகள் எதுவும் பெரிய அளவில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படவில்லை.

போதைப் பழக்கத்துக்கு அடிமையான அனைவருக்கும் உடனடியாக போதைப் பொருள் மறுவாழ்வு சிகிச்சை அளிக்காவிட்டால், அவர்கள் போதைப் பொருள் விற்பனையை மறைமுகமாக ஊக்கப்படுத்துவார்கள். நுகர்வோர் தேவை தொடர்ந்து இருக்கும் வரை, போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்ந்து நடைபெறும்.

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை மறுவாழ்வுக்கு உட்படுத்தாமல், போதைப் பொருள் விற்பனையைத் தடுப்பதற்காக மட்டும் எடுக்கப்படும் நடவடிக்கைகள், விழலுக்கு இறைத்த நீராக வீணாகும்.

'போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து மீட்பு மற்றும் மறுவாழ்வு மையங்கள்' தமிழ்நாட்டில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளன. அந்த மையங்களில் போதைப் பொருளுக்கு அடிமையான அனைவருக்கும் தேவையான சிகிச்சை மற்றும் பயிற்சி அளிக்க இயலாத நிலை நிலவுகிறது. இந்தப் பிரச்னையை தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments