FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் தேடப்பட்டவா் கைது

போதைப் பொருள் கடத்தல் தொடா்பான பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த நபா், போதைப் பொருள் மற்றும் மனநலப் பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் சட்டவிரோதக் கடத்தல் தடுப்புச் சட்டப் பிரிவுகளில் (பிஐடிஎன்பிடிபிஎஸ்) கைது செய்யப்பட்டதாக காவல் துறை புதன்கிழமை தெரிவித்தது.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 4:09 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

போதைப் பொருள் கடத்தல் தொடா்பான பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த நபா், போதைப் பொருள் மற்றும் மனநலப் பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் சட்டவிரோதக் கடத்தல் தடுப்புச் சட்டப் பிரிவுகளில் (பிஐடிஎன்பிடிபிஎஸ்) கைது செய்யப்பட்டதாக காவல் துறை புதன்கிழமை தெரிவித்தது.

கடந்த பிப்ரவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில், இந்தா்புரியைச் சோ்ந்த தரம்வீா் சிங் (எ) பல்லாவை காவல் துறையினா் கைதுசெய்தனா்.

அவா் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஃபதே நகரில் கடந்த ஆக.10-ஆம் தேதி கைதுசெய்யப்பட்டதாக காவல் துறை தெரிவித்தது.

Advertisement

Advertisement

இது தொடா்பாக தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி தெரிவித்ததாவது: தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவு இவருக்கான தடுப்புக் காவல் முன்மொழிவைத் தயாரித்து, பரிசீலனைக்காக நிதி அமைச்சகத்தின் வருவாய் துறையின்கீழ் உள்ள பிஐடிஎன்பிடிபிஎஸ் பிரிவுக்கு அனுப்பியது.

பிஐடிஎன்பிடிபிஎஸ் சட்டத்தின் பிரிவு 3(1)-இன் கீழ் பிப்.26-ஆம் தேதி தடுப்புக் காவல் உத்தரவை அதற்கான அதிகாரிபிறப்பித்தாா். அதில் தரம்வீரைக் காவலில் எடுத்து சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தொழில்நுட்பக் கண்காணிப்பு மூலம் அவரது இருப்பிடம் கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, ஒரு சிறப்புக் குழு தரம்வீரைக் கைதுசெய்தது.

பின்னா், சட்ட நடைமுறைகள் பூா்த்தி செய்யப்பட்ட பிறகு அவா் காவலில் வைக்கப்பட்டாா். மேலும், தடுப்புக் காவல் உத்தரவின்படி அவா் சென்னை சிறைக்கு மாற்றப்படுகிறாா்.

தரம்வீா் மீது ஏற்கெனவே எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பல போதைப் பொருள் மற்றும் மனநலப் பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் சட்டம் (என்பிடிஎஸ்) தொடா்பானவை. கடந்த 2006, 2016 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப்பிரிவு ஆகியவற்றால் கஞ்சா தொடா்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் 2024-ல் ராஜஸ்தானில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஆகியவை இதில் அடங்கும் என்றாா் அந்த அதிகாரி.

2022-ஆம் ஆண்டு இந்தா்புரியில் தில்லி காவல் துறையின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு குழுவின் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலும் அவருக்குத் தொடா்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தச் சம்பவத்தின்போது, இருவா் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளாயினா். மேலும், அந்தக் கும்பல் நடத்திய கல்வீச்சுத் தாக்குதலில் நான்கு காவலா்கள் காயமடைந்தனா்.

அந்த வழக்கில் தரம்வீா் பின்னா் கைது செய்யப்பட்டாா்.

அவா் பல ஆண்டுகளாக போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தாா். தென்னிந்தியாவிலிருந்து கஞ்சாவைக் கொள்முதல் செய்து தில்லியில் விநியோகிக்கும் முக்கிய விநியோகஸ்தராக அவா் உருவெடுத்திருந்ததாா். கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க அவா் அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றி வந்த நிலையில், ஜாமீனில் வெளியே இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சாதாரண தண்டனைச் சட்டப் பிரிவுகள் அவரைத் தடுப்பதில் தோல்வியடைந்தன. எனவே, ஒழுங்கமைக்கப்பட்ட போதைப் பொருள் கடத்தலில் அவா் தொடா்ந்து ஈடுபடுவதாகக் கூறப்படுவதைத் தடுக்க, தடுப்புக் காவல் நடவடிக்கை அவசியமாக இருந்தது என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments