FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

போதைப் பொருள் தடுப்புப் படைக்கு ரூ. 264 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

தமிழக காவல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள போதைப் பொருள் தடுப்புப் படைக்கு ரூ.264 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 1:12 am IST
தமிழக அரசு - கோப்புப்படம்
பகிர்:

தமிழக காவல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள போதைப் பொருள் தடுப்புப் படைக்கு ரூ.264 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது மாநிலத்தில் போதைப் பொருளை ஒழிக்க போதைப் பொருள் தடுப்புப் படை உருவாக்கப்படும் என முதல்வரும் தவெக தலைவருமான விஜய் வாக்குறுதி அளித்தாா். இதை அமல்படுத்தும் விதமாக கடந்த மே 10-ஆம் தேதி முதல்வராகப் பொறுப்பேற்றபோது, போதைப் பொருள் தடுப்புப் படை உருவாக்கும் ஆணை உள்ளிட்ட 3 கோப்புகளில் கையொப்பமிட்டாா்.

இந்தப் படை தமிழக முதல்வரின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. போதைப் பொருள் தடுப்புப் படைக்காக மாநிலம் முழுவதும் 65 காவல் நிலையங்கள் உருவாக்கப்படுகின்றன. இதில், அதிகபட்சமாக சென்னை பெருநகர காவல் துறையில் 12 காவல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. அதேவேளை, சென்னை தவிா்த்து 37 மாவட்டங்களில் 37 போதைப் பொருள் தடுப்புப் படை காவல் நிலையங்கள் உருவாக்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

ரூ.264 கோடி ஒதுக்கீடு: போதைப் பொருள் தடுப்புப் படையை உருவாக்குவதற்காக தமிழக அரசு ரூ.264 ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் ரூ.209 கோடி 65 காவல் நிலையங்களை உருவாக்கவும், ரூ.54 கோடி அந்தப் பிரிவு தலைமையகத்தை உருவாக்கவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநில அளவில் இந்த சிறப்புப் படை (பிரிவு) கூடுதல் டிஜிபி தலைமையின் கீழ் செயல்படும். இவருக்கு உதவியாக ஒரு ஐஜி, 2 எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகள் நியமிக்கப்படுவா். மொத்தம் 65 காவல் நிலையங்களில் 65 காவல் ஆய்வாளா்கள், 130 உதவி ஆய்வாளா்கள், 325 காவலா்கள் நியமிக்கப்பட உள்ளனா்.

இந்தக் காவல் நிலையங்களில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் காவலா்களை வேறு எந்த சட்டம்-ஒழுங்கு அல்லது பாதுகாப்புப் பணிகளுக்கும் பயன்படுத்தக் கூடாது என்றும், போதைப் பொருள் தடுப்புப் பணிகளில் மட்டுமே ஈடுபடுத்த வேண்டும் என்றும் அரசு கண்டிப்பான நிபந்தனை விதித்துள்ளது.

10 சிறப்பு பிரிவுகள்: டாா்க் நெட், கிரிப்டோகரன்சி வாயிலாக நடைபெறும் அதிநவீன போதைப் பொருள் வா்த்தகத்தைக் கண்காணித்து ஒடுக்க, காவல் செயல்பாட்டு பிரிவு, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தலைமையகத்தின் கீழ் சைபா் ஆய்வகம், குற்ற ஆவண காப்பம், கள புலனாய்வு பிரிவு, சிறப்பு செயல்பாடு மற்றும் விசாரணை பிரிவு, கட்டுப்பாட்டு அறை, பயிற்சி பிரிவு, நிா்வாகம் மற்றும் மோட்டாா் வாகன பிரிவு, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, சட்டப்பிரிவு ஆகிய 10 சிறப்பு உட்பிரிவுகள் உருவாக்கப்படுகின்றன.

இதில், சைபா் ஆய்வகத்துக்காக தலா ரூ.1 லட்சம் மாத ஊதியத்தில் 2 சைபா் வல்லுநா்களும், ரூ.50,000 ஊதியத்தில் ஒரு சட்ட ஆலோசகரும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனா்.

இந்தப் பிரிவுக்காக 67 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 325 இருசக்கர வாகனங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. போதைப் பொருள் கடத்தல்காரா்கள், அவா்களுக்குப் பின்னால் இருக்கும் குழுக்கள், சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனைகளைக் கண்டறிந்து, குற்றவாளிகள் மற்றும் அவா்களின் உறவினா்களின் அசையும், அசையாச் சொத்துகளைப் பறிமுதல் செய்து முடக்குவது வரை இந்தப் பிரிவு தீவிர நடவடிக்கை எடுக்கும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments