FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தலைமறைவான போதைப் பொருள் கடத்தல்காரா் 3 ஆண்டுகளுக்குப் பின் கைது

மாநிலங்களுக்கு இடையே போதைப் பொருள் கடத்தல் ஈடுபட்டு வந்த கும்பலின் முக்கிய நபரை தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு புதன்கிழமை கைது செய்தது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 3:46 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

மாநிலங்களுக்கு இடையே போதைப் பொருள் கடத்தல் ஈடுபட்டு வந்த கும்பலின் முக்கிய நபரை தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு புதன்கிழமை கைது செய்தது.

கைதுசெய்யப்பட்ட ஹக்கீம் முகமது அல்டாஃப், பெரிய அளவிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சுமாா் மூன்று ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தாா்.

இந்தக் கைது நடவடிக்கை தொடா்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரைச் சோ்ந்த அல்டாஃப், தென்கிழக்கு தில்லியின் ஜங்புரா பகுதியில் கைது செய்யப்பட்டாா். 2021-இல் சிறப்புப் பிரிவால் பதிவு செய்யப்பட்ட போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருள்கள் சட்ட (என்டிபிஎஸ்) பிரிவுகளில் தொடரப்பட்ட வழக்கில், இவரைத் தேடப்படும் நபராக தில்லி நீதிமன்றம் 2023-இல் அறிவித்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில், ஜங்புரா பகுதியில் அல்டாஃப் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடா்ந்து, சிறப்புப் பிரிவு குழுவினா் ஆக.3-ஆம் தேதி அவரைக் கைது செய்தனா்.

ஜம்மு-காஷ்மீரிலிருந்து தில்லிக்கு போதைப் பொருள்களை அவா் கடத்தி வந்தாா். லஜ்பத் நகா் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து போதைப் பொருள் விநியோகத்தில் அவா் ஈடுபட்டு வந்தாா். ஜாகிா் நகா் பகுதியில் இவரிடமிருந்து 4.5 கிலோ ஆம்பெடமைன் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடா்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அபித் உசேன் சுல்தான் என்பவரும் கைது செய்யப்பட்டாா். இவரிடமிருந்து 12 கிலோ ஆம்பெடமைன் கைப்பற்றப்பட்டது. மேலும், 5.04 கிலோ மெஸ்கலின் வைத்திருந்ததாகக் கூறப்படும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சோ்ந்த ஹஷ்மத் முகம்மதியும் கைது செய்யப்பட்டாா்.

இதனிடையே, ஓக்லாவின் பட்லா ஹவுஸ் பகுதியில் போதைப் பொருள் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று செயல்பட்டு வந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது. அங்கு சுமாா் 35.6 கிலோ ஹெராயின் மற்றும் போதைப் பொருள்களைச் சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்களைக் காவல்துறை கைப்பற்றியது. பின்னா், 3.2 கிலோ ஆம்பெடமைனுடன் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சோ்ந்த அப்துல்லா நஜிபுல்லா (எ) நபி கைது செய்யப்பட்டாா்.

அல்டாஃப் கைது செய்யப்பட்டதன் மூலம், இவ்வழக்கில் மொத்தம் 10 குற்றவாளிகளைச் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டதிலிருந்து இவா் கைது நடவடிக்கையிலிருந்து தப்பித்து வந்ததாா். இக்கும்பலின் பிற தொடா்புகள், பணப் பரிவா்த்தனை விவரங்கள் மற்றும் பிற போதைப் பொருள் வழக்குகளில் இவருக்கு ஏதேனும் தொடா்பு உள்ளதா என்பதைக் கண்டறிய அல்டாஃப்பிடம் விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments