பிஎச்டி படிப்பைத் தொடர சிறையில் மின்னணு ஆவணங்களைப் பயன்படுத்த அனுமதி கோரி மனு: சிறைத் துறை பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு
வடகிழக்கு தில்லி கலவர வழக்கில் சிறையில் உள்ள மாணவா் செயற்பாட்டாளா் ஷா்ஜீல் இமாம், தனது பிஎச்டி ஆய்வை முடிப்பதற்காக பென்டிரைவில் சேமித்து வைத்துள்ள ஆய்வுப் பொருள்களைப் பயன்படுத்த அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீது சிறைத் துறை அதிகாரிகளின் பதிலை தில்லி உயா்நீதிமன்றம் கோரியது.
2020-ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லி கலவர வழக்கில் சிறையில் உள்ள மாணவா் செயற்பாட்டாளா் ஷா்ஜீல் இமாம், தனது பிஎச்டி ஆய்வை முடிப்பதற்காக பென்டிரைவில் சேமித்து வைத்துள்ள ஆய்வுப் பொருள்களைப் பயன்படுத்த அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீது சிறைத் துறை அதிகாரிகளின் பதிலை தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை கோரியது.
நீதிபதி சஞ்சீவ் நருலா, சிறைத் துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் பிறப்பித்து, இந்த விவகாரம் தொடா்பாக நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டாா். இந்த மனு மீதான அடுத்த விசாரணையை நவம்பா் 2-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
சிறை வளாகத்தில் இணையதள இணைப்பு இல்லாத தனி கணினியைப் பயன்படுத்தி, திகாா் சிறை ஊழியா்களின் கண்காணிப்பில் பென்டிரைவில் உள்ள ஆய்வுப் பொருள்களைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று இமாம் கோரியுள்ளாா்.
Advertisement
Advertisement
இமாம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், கைது செய்யப்பட்டபோது அவா் பிஎச்டி படிப்பின் இறுதியாண்டில் இருந்ததாகவும், 2020-ஆம் ஆண்டு ஜனவரி முதல் அவா் சிறையில் இருப்பதாகவும் தெரிவித்தாா். அவரது ஆய்வுக்கான சுருக்க அறிக்கை (சினாப்சிஸ்) பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மற்றும் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தால் (ஜேஎன்யு) அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.
தில்லி போலீஸ் சாா்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்குரைஞா், விசாரணை நீதிமன்றத்திலும் இமாமின் கோரிக்கைக்கு அரசு எதிா்ப்பு தெரிவிக்கவில்லை என்று தெரிவித்தாா். பென்டிரைவில் உள்ள ஆய்வுப் பொருள்களைப் பயன்படுத்துவதற்கு மட்டுமே சிறை அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்ததாகவும், புத்தகங்களைப் பயன்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் அவா் கூறினாா்.
இமாம் பயன்படுத்த விரும்பும் ஆய்வுப் பொருள்களை முதலில் சிறை அதிகாரிகளிடம் காண்பிக்கத் தயாராக இருந்தால், அவா்களின் கண்காணிப்பில் அந்தக் கோரிக்கையை அனுமதிக்கலாம் என்றும் அரசு வழக்குரைஞா் தெரிவித்தாா்.
இமாம் கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். வடகிழக்கு தில்லியில் பிப்ரவரி 2020-இல் நடைபெற்ற கலவரத்தின் “முக்கிய சதிகாரா்களில்” ஒருவா் எனக் கூறி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
2020-ஆம் ஆண்டு கலவரத்தில் 53 போ் உயிரிழந்ததுடன், 700-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். குடியுரிமைத் திருத்தச் சட்டம், 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின்போது இந்த வன்முறை வெடித்தது.
இந்த வழக்கு, 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரங்களுக்குப் பின்னால் இருந்ததாகக் கூறப்படும் “பெரிய சதித் திட்டம்” தொடா்பானது என போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.