திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் புறக்கணிக்கப்படும் பயணிகள் சேவை
திருச்செந்தூர், ஜூன் 17: திருச்செந்துர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான சேவைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் பொதுமக்களும், பயணிகளும் அதிருப்தியில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடைக்கோடி ரயில
திருச்செந்தூர், ஜூன் 17: திருச்செந்துர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான சேவைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் பொதுமக்களும், பயணிகளும் அதிருப்தியில் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடைக்கோடி ரயில் நிலையம் திருச்செந்தூர் ரயில் நிலையம். இங்கு 2-ம் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இதனால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு ரயில் மூலம் வந்து செல்கின்றனர்.
மேலும் சென்னை, கோவை, திருச்சி, மும்பை, கோல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய தொழில் நகரங்களில் திருச்செந்தூரைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த வணிகர்கள், அரசுப் பணியாளர்கள், தனியார் நிறுவனத் தொழிலாளர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ரயில் சேவையை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
Advertisement
Advertisement
திருச்செந்தூர்-திருநெல்வேலி இடையே 70 ஆண்டுகளுக்கு மேலாக மீட்டர் கேஜ் பாதையில் நடைபெற்ற வந்த ரயில் போக்குவரத்து ரூ. 118 கோடியில் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு, 27.8.08 முதல் பயன்பாட்டில் உள்ளது.
திருச்செந்தூர்-திருநெல்வேலி இடையே தினமும் 4 முறை பயணிகள் ரயிலும், சென்னைக்கு வியாழன்தோறும் செந்தூர் விரைவு ரயிலும் இயக்கப்படுகின்றன.
நல்ல வருவாய் தரக்கூடிய ரயில் நிலையங்களில் திருச்செந்தூரும் ஒன்று. ஆனால், ரயில்வே நிர்வாகமோ திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு அளிக்க வேண்டிய சேவைகளை சரிவர அளிக்கவில்லை என்ற குறை மக்களிடையே உள்ளது.
திருச்செந்தூர்-திருநெல்வேலி இடையிலான அகல ரயில் பாதைத் தொடக்க விழா அன்று ரயில் குறித்த விவரங்களை பயணிகள் எளிதில் தெரிந்து கொள்ளும் வைகயில் திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் கணினி தொடுதிரை வைக்கப்பட்டது. இது பயணிகளுக்கு மிகுந்த உதவியாக இருந்தது.
ஆனால், சில நாள்களிலேயே அத் தொடுதிரை அகற்றப்பட்டு விட்டது. அமைச்சர், உயர் அதிகாரிகளை திருப்திபடுத்துவதற்காக அகல ரயில் பாதை தொடக்க விழா அன்று வேறு ஒரு ரயில் நிலையத்திலிருந்து நவீன தொடுதிரை இங்கு கொண்டுவைக்கப்பட்டதாகவும், அது எங்கிருந்து கொண்டுவரப்பட்டதோ அதே ரயில் நிலையத்துக்கு மீண்டும கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதனால், திருச்செந்தூர் ரயில் நிலையத்துக்கு பயணச் சீட்டு முன்பதிவுக்காக வரும் பொதுமக்கள் ரயில் சேவை குறித்த விவரங்களை அறிய மிகுந்த சிரமப்பட்டனர்.
இதுகுறித்து ஊடகங்களும், பொதுமக்கள் மற்றும் திருச்செந்தூர் ரயில் நிலைய அதிகாரிகளும் ரயில்வே நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றதன் விளைவாக சில மாதங்களுக்கு முன்னர் பழைய எலக்ட்ரானிக் தொடுதிரை ஒன்று திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டது.
ஆனால், இத் தொடுதிரை வைக்கப்பட்ட சில நாள்களிலேயே எண்களை அழுத்தக்கூடிய பட்டன்கள் சரிவர இயங்கவில்லை. சில எண்களின் பட்டன்களைக் காணவில்லை. பயணிகள் ரயில் குறித்த விவரங்களை சரியாக தெரிந்துகொள்ள முடியவில்லை. இதனால், மீண்டும் ரயில் நிலையத்தில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அகல ரயில் பாதை சேவை தொடங்கப்பட்டு 22 மாதங்கள் ஆன பின்னரும் ரயில் நிலையத்தில் போதிய மின் விளக்கு வசதிகள் இன்றுவரை ஏற்படுத்தப்படவில்லை. குறிப்பாக, பயணிகள் ரயில் பெட்டியில் ஏறுவதற்காக நடந்து செல்லும் நடைபாதையில்கூட போதிய மின்விளக்குகள் இல்லை.
பயணிகள் வந்து செல்லக்கூடிய எண்ணிக்கைக்கு ஏற்றவாறு குளியலறை, கழிப்பிட வசதிகள் போதிய அளவில் இல்லை. பயணிகள் தங்க வசதிகள் இல்லை. மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான வசதிகள் ரயில் நிலையத்தில் இதுவரை முறையாக செய்யப்படவில்லை.
திருச்செந்தூர்-சென்னை இடையே தினசரி நேரடி விரைவு ரயிலை இயக்க வேண்டும். திருநெல்வேலி - ஈரோடு பயணிகள் ரயிலை திருச்செந்தூர் வரை நீட்டிக்க வேண்டும். மும்பை, தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு திருச்செந்தூரிலிருந்து வாராந்திர ரயில்களை இயக்க வேண்டும் என்றெல்லாம் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ரயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகின்ற தருணத்தில் அடிப்படை வசதிகளைக்கூட முறையாக செய்யாமல் காலம் தாழ்த்துவதாகக் கூறி பயணிகள் போராட்டத்துக்குத் தயாராகி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.