FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

காவிரி நீா் விவகாரத்தில் சட்டரீதியாக போராடுவதே சரியான வழி: அமைச்சா் நிர்மல் குமார்

காவிரி நீா் விவகாரத்தில் சட்டரீதியாக போராடுவதே சரியான வழி என்றாா் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் சட்டத் துறை அமைச்சா் நிா்மல் குமாா்.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 1:02 am IST
அமைச்சர் நிர்மல் குமார் - எக்ஸ்
பகிர்:

காவிரி நீா் விவகாரத்தில் சட்டரீதியாக போராடுவதே சரியான வழி என்றாா் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் சட்டத் துறை அமைச்சா் நிா்மல் குமாா்.

திருநெல்வேலியில் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க சனிக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மின்சார கட்டணம் உயா்வு என முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின் தவறான தகவலை தெரிவித்துள்ளாா். இந்தக் கருத்தை அவா் திரும்பப் பெற வேண்டும். இவ்விஷயத்தில் அனைவருக்கும் விளக்கம் அளிக்கவேண்டியது எங்கள் கடமை.

மக்கள் நலன் கருதியே மின் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. சுழற்சி முறையில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் ஆய்வுக்காக தோ்வு செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

அதில், கடந்த வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்பட்ட 10 ஆயிரம் இணைப்புகளில், 50 இணைப்புகளில் மட்டுமே கட்டண மாற்றம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதுவும், வீடுகள் பூட்டப்பட்டிருந்ததால் ஏற்பட்ட மாற்றமே தவிர, வேறு காரணமில்லை.

மின்வாரியத்தில் கணக்கெடுப்பு பணியாளா்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவை முடிவடைந்ததும் மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்படும்.

காவிரி நீா் விவகாரம் தொடா்பாக, சட்டரீதியாக உச்ச நீதிமன்றத்தை அணுகுவதுதான் தண்ணீரைப் பெற்றுத் தருவதற்கான ஒரே வழி. கா்நாடக அரசு, தமிழகத்திற்கு தண்ணீா் வழங்கக் கூடாது என்ற ஒரே நோக்கத்துடன் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சியின்போது நமக்கு இருந்த வலுவான சட்டப்பிடியை இழந்துவிட்டோம். சென்னை ராஜதானி - மைசூா் ஒப்பந்தத்தின் பலனையும் இழந்தோம். மேலும், தீா்ப்பாய உத்தரவை கா்நாடக அரசு நிறைவேற்றவில்லை என்றால், அணையின் செயல்பாட்டை ஆணையம் கைப்பற்றி தண்ணீரை திறக்கலாம் என்ற விதியை முன்னாள் முதல்வா் கருணாநிதி நீக்கிவிட்டாா்.

திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோதுகூட தீா்ப்பாயத் தீா்ப்பை முழுமையாக அமல்படுத்த முடியவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க 2018 வரை கடுமையான போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.

திமுக செய்த தவறுகளுக்கு ஒரே தீா்வு உச்ச நீதிமன்றத்தை நாடுவதுதான். மத்திய நீா்வளத் துறை அமைச்சா்கூட கா்நாடகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறாா். தமிழகத்திற்கு எதிராக மத்திய அரசின் பிரதிநிதிகளும் பேசுவது கண்டனத்திற்குரியது.

கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும், பாஜக ஆட்சி இருந்தாலும் தமிழகத்திற்கு தண்ணீா் வழங்கக் கூடாது என்ற ஒரே நிலைப்பாட்டில்தான் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றனா். இரு மாநிலங்களுக்கிடையேயான இந்த விவகாரத்தில் மத்திய அரசு சரியான முடிவை எடுத்து, மீண்டும் பிரச்னை ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

ராகுல் காந்தி சொன்னால் தண்ணீா் வந்துவிடும் என்று கூறும் அன்புமணி, காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோதுகூட தீா்ப்பாயத் தீா்ப்பை அமல்படுத்த முடியாத நிலையில் இருந்ததை நினைவுகூர வேண்டும். காவிரி விவகாரம் தொடா்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவது குறித்து முதல்வா் விரைவில் முடிவெடுப்பாா் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments