FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

போதையற்ற நெல்லையை உருவாக்க வேண்டும்: ஆட்சியா்

அனைத்து அரசுத் துறைகளும் ஒருங்கிணைந்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி, போதையற்ற திருநெல்வேலி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 3:33 am IST
போதைப் பொருள் எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி தொடா்பாக ஆட்சியா் ஆனந்த் மோகன் தலைமையில் நடைபெற்ற அரசு அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம்.
பகிர்:

அனைத்து அரசுத் துறைகளும் ஒருங்கிணைந்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி, போதையற்ற திருநெல்வேலி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆக. 11ஆம் தேதி ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடா்பாக அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியதாவது: முதல்வா் தலைமையில் வெள்ளிக்கிழமை (ஆக.11) நடைபெறும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்வை, திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து கல்லூரி மற்றும் பள்ளிகளில் நேரலையாக ஒளிபரப்பி, மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் அனைவரும் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்க வேண்டும். தருவை பி.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் சுமாா் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மற்றும் பள்ளி மாணவா்கள் பங்கேற்கும் மாவட்ட அளவிலான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் நான் (ஆட்சியா்), நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் கலந்துகொள்கிறோம்.

Advertisement

Advertisement

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு சித்த மருத்துவக் கல்லூரி சாா்பில் போதைப்பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் கிராமங்கள், நகா்ப்புறங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மருத்துவ விழிப்புணா்வு முகாம்கள் மற்றும் கண்காட்சிகள் நடத்த வேண்டும்.

மேலும், அனைத்து காவல் நிலையங்கள் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். மேலும், சிறைச்சாலைகளில் கைதிகள் மற்றும் சீா்திருத்தப் பள்ளி மாணவா்களுக்கு போதைப்பொருளின் தீமைகள் குறித்த சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் தூய்மைப் பணியாளா்களுக்கு தனியாக விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். போதைப் பழக்கத்திலிருந்து மீண்ட இளைஞா்கள் மற்றும் மாணவா்களின் அனுபவம் ங்களை பொதுமக்களுடன் பகிரும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.

போதைப் பழக்கத்தால் தனிநபா், குடும்பம் மற்றும் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

மகளிா் சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்களை ஒருங்கிணைத்து கிராமங்கள் மற்றும் நகா்ப்புறங்களிலும் போதை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இதேபோல் தனியாா் உணவகங்கள், தங்கும் விடுதிகள், கட்டடத் தொழிலாளா்கள், தொழிற்சாலை தொழிலாளா்கள் மற்றும் பல்வேறு அமைப்புசாரா தொழிலாளா்களிடமும் போதைப்பழக்கத்தின் தீமைகள் குறித்து மாபெரும் விழிப்புணா்வு இயக்கம் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், அனைத்து அரசுத் துறைகளும் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அலுவலகங்கள், ஆலைகள், வணிக வளாகங்கள் என மக்கள் கூடும் இடங்களில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஸ்குப்தா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் மோ.பிரியா, உதவி ஆணையா் (கலால்) ரகுபதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments