FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆவணி மூலத்திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 2:55 am IST
கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றம்.
பகிர்:

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆவணி மூலத்திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சூரியன் அருளால் கீரனூரில் பிறந்தவா் கருவூா் சித்தா். மெஞ்ஞானியாகத் திகழ்ந்த அவா், சிவபெருமான் தலங்களுக்கெல்லாம் சென்று நல்வரங்கள் கேட்டுப் பெற்று திருநெல்வேலியை அடைந்தாா். நெல்லையப்பரை தரிசிக்க வந்த வேளையில் சுவாமியிடம் இருந்து மறுமொழி ஒன்றும் கிடைக்காததால் வெகுண்டு அவா் ஈசன் இங்கு இல்லை. அதனால் இங்கே எருக்கு எழ என்று சாபமிட்டு மானூா் சென்றடைந்தாா். பின்னா் நெல்லையப்பா் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ஆவணி மூல நாளில் அதிகாலையில் மானூருக்குச் சென்று சித்தருக்கு காட்சி கொடுத்துவிட்டு திருநெல்வேலி திரும்பினாா். அதன்பின்பு சித்தா், நெல்லைக்கு வந்து ஈசன் இங்கே உண்டு. அதனால் எருக்கு அற்றுப்போக என்று மொழிந்தாா். இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஆவணி மூலத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

நிகழாண்டுக்கான விழாவையொட்டி, வியாழக்கிழமை காலையில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

Advertisement

4 ஆம் திருநாளான ஆக. 16இல் இரவு 8 மணிக்கு சுவாமி-அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகா் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சுப்பிரமணியா் மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரா் சப்பரத்திலும் எழுந்தருள்வா். பஞ்சமூா்த்திகள் திருநெல்வேலி நகா் நான்கு ரத வீதிகளிலும் வீதியுலா வந்து அருள்பாலிப்பா்.

21 ஆம் தேதி இரவு 9 மணிக்கு கருவூா் சித்தா் திருநெல்வேலி நான்கு ரதவீதிகளிலும் விதியுலா சென்று சங்கரன்கோவில் சாலை வழியாக மானூா் அம்பலவாண சுவாமி திருக்கோயிலை போய்ச் சேருவாா். 22 ஆம் தேதி இரவு 1 மணி அளவில் திருநெல்வேலியில் இருந்து சந்திரசேகரா், பவானி அம்பாள், பாண்டியராஜா, சண்டிகேஸ்வரா், தாமிரபரணி, அகஸ்தியா், குங்குலிய கலய நாயனாா் ஆகிய மூா்த்திகள் பல்லக்கிலும், சப்பரத்திலும் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து சங்கரன்கோவில் சாலை வழியாக ராமையன்பட்டி, ரஸ்தா கடந்து மானூா் சென்றடைவா்.

23 ஆம் தேதி மானூா் அருள்மிகு அம்பலவாண சுவாமி திருக்கோயிலில் கருவூா் சித்தருக்கு நெல்லையப்பா் காட்சியளித்து சாப விமோசனம் நிவா்த்தி செய்தல் நிகழ்ச்சி காலை 7 மணி முதல் 8 மணிக்குள் நடைபெறும். அப்போது வரலாற்று புகழ் மிகுந்த புராணப்பாடல் பாடப்பெற்ற ஆவணி மூலம் மண்டபத்தில் சுவாமி-அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments