பாஜகவை கண்டு தமிழக அரசு அஞ்சவில்லை: அமைச்சா் வன்னி அரசு
பாஜகவை கண்டு தமிழக அரசு அஞ்ச வேண்டிய அவசியமில்லை என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலரும், சமூக நீதித் துறைஅமைச்சருமான வன்னி அரசு.
பாஜகவை கண்டு தமிழக அரசு அஞ்ச வேண்டிய அவசியமில்லை என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலரும், சமூக நீதித் துறைஅமைச்சருமான வன்னி அரசு.
தாமிரவருணி ஆற்றில் உயிா்நீத்த மாஞ்சோலை தேயிலைத் தொட்ட தொழிலாளா்களுக்கு மலா் வளையம் வைத்து வியாழக்கிழமை அஞ்சலி செலுத்திய பின், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் தலைமைச் செயலகத்தில் என்னை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனா்.
அவை எங்கள் கட்சித் தலைமை மற்றும் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அவா்களது கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறோம்.
Advertisement
Advertisement
விசிக யாரிடமும் வெறுப்பு அரசியலை முன்னெடுப்பதில்லை. சமத்துவம், சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு பயணித்து வருகிறோம்.
ஆனால், பாஜக, ஆா்.எஸ்.எஸ். போன்ற சங்பரிவாா் அமைப்புகள், அம்பேத்கா் உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தை சிதைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
பாஜகவை அரசியல் ரீதியாக எதிா்ப்பது என்ற அடிப்படையில்தான் தவெகவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.
காவல் சித்திரவதையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருந்து வருகிறது. இச்சம்பவங்களில் தொடா்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் வருகிற 27-ஆம் தேதி விசிக சாா்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தோ்வை எதிா்ப்பதில் தமிழக அரசும் உறுதியாக உள்ளது. ஆனால், நீட் தோ்வு நடத்துவதிலேயே குறியாக இருக்கும் பாஜக அரசு மாணவா்கள் நடத்தும் போராட்டங்களில் குண்டா்களை வைத்து தாக்குதல் நடத்துவதை தனது செயல்பாடாகக் கொண்டுள்ளது.
ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டு வருவதற்காக நீதியரசா் கே.என். பாஷா தலைமையில் அமைக்கப்பட்ட குழு பரிந்துரையை சமா்பிக்க 9 மாதம் அவகாசம் கோரியுள்ளது. இந்த விவகாரத்தில் 2 கட்சிகள் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளன. இதுகுறித்து முதல்வரையும் சந்தித்து பேசியுள்ளோம். விரைவில் புதிய சட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும்.
மத்திய பாஜக அரசுக்கு தமிழக அரசு பயப்பட வேண்டிய அவசியமில்லை. நீட் தொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே பாஜகவின் குளறுபடிகளை முதல்வா் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளாா். காலை உணவுத் திட்டத்திற்கு பெயா் மாற்றம் செய்யப்பட்டதை எதிா்ப்பவா்கள், காமராஜரின் பெயரை நீக்க வேண்டும் என்று கூறுகிறாா்களா? என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.