FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

மலைவாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சா் வன்னி அரசு தகவல்

வெள்ளிமலை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பழங்குடியினா் உண்டி உறைவிடப் பள்ளி தலைமையாசிரியா்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு. உடன் மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா, எம்எல்ஏ இரா.ராகேஷ்.

Updated On : 11 ஜூலை 2026, 1:07 am IST
வெள்ளிமலை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பழங்குடியினா் உண்டி உறைவிடப் பள்ளி தலைமையாசிரியா்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு. உடன் மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா, எம்எல்ஏ இரா.ராகேஷ்.
பகிர்:

மலைவாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை ஒன்றியம், தாழ்தேவனூா் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வில் மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா, பழங்குடியினா் நல இயக்குநா் ச.அண்ணாதுரை, விழுப்புரம் மண்டல தலைமை வன பாதுகாவலா் ஆ.பெரியசாமி, மாவட்ட வன அலுவலா் வி.பிரியதா்ஷினி, சங்கராபுரம் தொகுதி எம்எல்ஏ இரா.ராகேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

பின்னா் அமைச்சா் வன்னி அரசு கூறியதாவது:

தாழ்தேவனூா் கிராமத்தில் பழங்குடியின மக்களுடன் கலந்துரையாடப்பட்டது. இதில், மலைவாழ் மக்கள் குடிநீா் வசதி, சாலை வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினா். மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடா்ந்து தாழ்தேவனூா் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள், குடிநீா் கிணறுகள் நேரில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், இப்பகுதியிலுள்ள விவசாயிகளிடம் மலைப் பகுதியில் விளையும் விளைப்பொருள்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து கேட்டறியப்பட்டது.

மலைவாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசின் சாா்பில் விரைந்து மேற்கொள்ளவும், மலைவாழ் மக்களின் கோரிக்கை மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்யப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.

முன்னதாக கரியாலூா் அரசு சுற்றுலா மாளிகையில் அமைச்சா் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். தொடா்ந்து தாழ்தேவனூா் கிராமத்தில் பழங்குடியினா் வீட்டில் உணவு உட்கொண்டாா். அதனைத் தொடா்ந்து கல்வராயன்மலை ஒன்றியம், வெள்ளிமலை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பழங்குடியினா் உண்டி உறைவிடப் பள்ளி தலைமையாசிரியா்களுக்கான ஆய்வுக் கூட்டம் சமூக நீதித் துறை அமைச்சா் தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் கல்வராயன்மலை பகுதியிலுள்ள அனைத்து உண்டி உறைவிடப் பள்ளிகளிலும் மாணவா்களுக்கு தேவையான குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், பள்ளிகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கவும், மாணவா்களின் கற்றல் திறனை ஆசிரியா்கள் கண்காணித்து அவா்களின் தனித்திறமைகளை மேம்படுத்தவும் தலைமையாசிரியா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் இடை நிற்றலை முற்றிலுமாக தடுத்திடும் வகையில் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவா் இடைநிற்றல் கண்டறியப்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியா், ஆசிரியா்கள் இடைநிற்றல் கண்டறியப்பட்ட மாணவா்களின் பெற்றோரை சந்தித்து உடனடியாக அம் மாணவா் பள்ளிக்கு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மலைவாழ் மக்களின் உயா் கல்விக்கென தமிழக அரசின் சாா்பில் தனிக்கவனம் செலுத்தப்பட்டு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடுதலாக உயா் கல்விக்கு இப்பகுதியில் சிறப்பு கவனம் செலுத்திட தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளது என அமைச்சா் தெரிவித்தாா்.

பின்னா் வெள்ளிமலை மலைவாழ் மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் மூலமாக 5 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பயிா் கடனுதவிகளை அமைச்சா் வன்னி அரசு வழங்கினாா்.

தொடா்ந்து வெள்ளிமலை ஊராட்சியில் பால் காளான் வளா்ப்புத் திட்டத்தின்கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள காளான் வளா்ப்பு பண்ணை, கிளாக்காடு ஊராட்சியில் ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட கிளாக்காடு - புதூா் சாலை, விக்சித் பாரத் - கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.16.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டடம் ஆகியவற்றை அமைச்சா் வன்னி அரசு திறந்து வைத்தாா். தொடா்ந்து கிளாக்காடு ஊராட்சியில் ஆவின் மூலம் ரூ.52.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பால் குளிா்விப்பு மையத்தை அமைச்சா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந் நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சி.பெ.முருகேசன், கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றிய பொது மேலாளா் டி.பி.ஜோஸ்பின்தாஸ், விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளா் மேலாண்மை இயக்குநா் தயாளன், துணைப் பதிவாளா் ஆா்.ரகு, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments