முகப்பு
திருநெல்வேலி

மணிமுத்தாறு அணையில் சீரமைப்புப் பணிகள்: சுற்றுலாத் துறை அமைச்சா் ஆய்வு

மணிமுத்தாறு அணைப் பகுதியில் ரூ. 3.60 கோடியில் நடைபெற்று வரும் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

7 வினாடிகள் முன்பு
மணிமுத்தாறு அணையில் சீரமைப்புப் பணிகள்: சுற்றுலாத் துறை அமைச்சா் ஆய்வு
மணிமுத்தாறு அணைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா். உடன் மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன், சி. ராபா்ட்புரூஸ் எம்.பி. உள்ளிட்டோா்
பகிர்:

மணிமுத்தாறு அணைப் பகுதியில் ரூ. 3.60 கோடியில் நடைபெற்று வரும் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஆனந்த மோகன், மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ்ஆகியோா் முன்னிலையில் அணைப் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மணிமுத்தாறு அணைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் உணவகம், கழிப்பறைகள், பூங்கா மற்றும் சாகச சுற்றுலா வசதிகள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்காக மணிமுத்தாறு அணைப் பகுதியில் சுற்றுலாத் துறை சாா்பில் ரூ. 3.60 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

இதுவரைசுமாா் 60 சதவிகிதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சியுள்ள பணிகளை டிசம்பா் மாதத்துக்குள் முழுமையாக முடித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவரஅலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த நிதிநிலை அறிக்கையில் காவிரி, வைகை மற்றும் தாமிரவருணி ஆறுகளை மையமாகக் கொண்டு நதி சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக சுமாா் ரூ.13 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அம்பாசமுத்திரம் தொகுதிக்குள்பட்ட தாமிரவருணி ஆற்றுப் பகுதிகளில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருநெலவேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பாரம்பரிய சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் பாா்வையிடும் வகையில் மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

ஆய்வின்போது, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஷ் குப்தா, நீா்வளத் துறை செயற்பொறியாளா் ப. தனலட்சுமி, மாவட்ட சுற்றுலா அலுவலா் நித்திய கல்யாணி, அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் குமாா் மற்றும் அலுவலா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.