அக்வான் புயல்! ஒடிசாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்!
ஒடிசாவில் கடற்கரை சுற்றுலா நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது பற்றி..
வங்கக் கடலில் உருவாகியுள்ள அக்வான் புயல் காரணமாக, ஒடிசா அரசு கடற்கரை சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பாடு விதித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி,
Advertisement
Advertisement
இந்தத் தீவிர புயலானது மணிக்கு 100-110 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 120 கி.மீ வேகத்திலும் காற்று வீசும் வகையில் வலுப்பெற்றுள்ளது. இது, நவம்பர் 20-ஆம் தேதி நண்பகல் ஆந்திரத்தின் நெல்லூர் - விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் தாக்கத்தால் ஒடிசாவிலும் பலத்த காற்று வீசக்கூடும். வியாழக்கிழமை வேகம் மணிக்கு 40-50 கி.மீ ஆகவும், அடுத்தடுத்த நாள்களில் 50-60 கி.மீ ஆகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நவம்பர் 18 இரவு முதல் 21-ஆம் தேதி வரை கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்படும்.
வானிலை எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஒடிசாவின் சிறப்பு நிவாரண ஆணையர் ராஜேஷ் பி. பாட்டீல், சுற்றுலாத் துறையின் ஆணையர் மற்றும் செயலாளருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.
கடல் சீற்றம், பலத்த காற்று, கனமழை மற்றும் கடற்கரை பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதால் ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள், பார்வையாளர்கள், சுற்றுலாத் துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களைப் பாதுகாப்பது அவசியமாகும்.
பாதிக்கப்படக்கூடிய கடற்கரைப் பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகள், பொழுதுபோக்குச் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு, சுற்றுலாத் துறை அதிகாரிகள், சுற்றுலா நிறுவனங்கள், உணவகங்கள், ரிசார்ட்டுகள் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினருக்கு அறிவுறுத்துமாறு சுற்றுலாத் துறையைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
நிலைமை நீராகும் வரை படகு சவாரி, நீர் விளையாட்டுகள், சுற்றுலாப் படகுப் பயணங்கள், கடல் சார்ந்த பிற சுற்றுலா நடவடிக்கைகளை நிறுத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பாதுகாப்பற்ற கடற்கரைகளை, கடல் ஓரங்கள், படகுத் துறைகள் மற்றும் கடற்கரையையொட்டிய பகுதிகளில் பொதுமக்கள் செல்வதைத் தடுக்குமாறும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
கடற்கரை பகுதியில் அமைந்துள்ள உணவகங்களில் தங்கியுள்ளோருக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும். அவர்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும். அவசரக் காலத் தொடர்புகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களைத் தயாராக வைத்திருக்கவும் அறிவுறுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ள எச்சரிக்கைகள் திரும்பப் பெறப்படும் வரையிலும், சூழல் பாதுகாப்பானது என மாவட்ட நிர்வாகம் சான்றளிக்கும் வரையிலும் இவை தொடரும் என்று அந்த கடிதத்தில் மாநில நிவாரண ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.