FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அக்வான் புயல் எங்கே கரையைக் கடக்கும்? வெளியான அதிர்ச்சித் தகவல்!

அக்வான் புயல் எங்கே கரையைக் கடக்கும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

4 வினாடிகள் முன்பு
அக்வான் புயல் சின்னம் - IMD
பகிர்:

வங்கக் கடலில் இன்று மாலை உருவாகவிருக்கும் அக்வான் புயல், சென்னைக்கு அருகே கரையைக் கடக்காது, இதனால், சென்னைக்கு எதிர்பார்த்த அளவுக்கு மழை வாய்ப்பும் இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, அக்வான் புயல், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 20ஆம் தேதி நண்பகலில், ஆந்திர மாநிலம் நெல்லூர் - துனி என்றப் பகுதிக்கு இடையே ஏனாம் கடற்கரைக்கு அருகே அதி தீவிர புயலாக கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

வங்கக் கடலில் உருவாகவிருக்கும் அக்வான் என பெயர் சூட்டப்படவிருக்கும் புயல் சின்னம், எங்கே? எப்போது? கரையைக் கடக்கும் என்பதை இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது உறுதி செய்திருக்கிறது.

சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும், இல்லை ஆந்திரத்துக்குச் செல்கிறது என்று இரண்டு நாள்களுக்கும் மேலாக போக்குக்காட்டி வந்த புயல் சின்னம், சென்னைக்கு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 6 கி.மீ வேகத்தில் வடக்கு - வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.

இன்று (நவம்பர் 16) காலை 08:30 மணி நிலவரப்படி, புயல் சின்னம் அதே பகுதியில், அதாவது 11.2° வடக்கு அட்சரேகை மற்றும் 86.4° கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகில் மையம் கொண்டுள்ளது.

இது திரிகோணமலைக்கு (இலங்கை) கிழக்கே-வடகிழக்கே சுமார் 630 கி.மீ தொலைவிலும், ஸ்ரீ விஜய புரத்திற்கு (அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்) மேற்கே 690 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு (தமிழ்நாடு) கிழக்கே-தென்கிழக்கே 700 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு (ஆந்திரப் பிரதேசம்) தெற்கே-தென்கிழக்கே 800 கி.மீ தொலைவிலும், கோபால்பூருக்கு (ஒடிசா) தெற்கே 910 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

புயல் சின்னமானது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவம்பர் 16) மாலை தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு-மத்திய வங்கக்கடல் பகுதியில் 'புயலாக' (Cyclonic Storm) வலுப்பெறக்கூடும்.

மேலும், நவம்பர் 17ஆம் தேதி மாலையில், இது மேற்கு-மத்திய வங்கக்கடல் பகுதியில் 'தீவிர புயலாக' (Severe Cyclonic Storm) வலுவடைய வாய்ப்புள்ளது.

அதன் பிறகு, இது மேலும் வலுவடைந்து, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 20ஆம் தேதி மதியம், ஆந்திர மாநிலம் நெல்லூர் மற்றும் துனி பகுதிக்கு இடையே ஏனாம் கடற்கரைக்கு அருகே அதி தீவிர புயலாக கரையைக் கடக்கக்கூடும்.

அப்போது காற்றின் வேகம் மணிக்கு 120-130 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 145 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ஒருபக்கம், சென்னைக்கு புயல் இல்லை என்பது ஆறுதலை அளித்தாலும், போதிய மழை கிடைக்காவிட்டால், கோடைக்காலத்தில் வரும் தண்ணீர் பஞ்சம், அடுத்த ஒரு சில மாதங்களிலேயே தொடங்கிவிடுமே என்ற அச்சம் நிலவி வருகிறது.

summary

Where will Cyclone Akwan make landfall? Shocking information revealed!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.