FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

புரட்டாசி 3-ஆவது சனி: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமையையொட்டி, திருநெல்வேலி சுற்றுவட்டார பெருமாள் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

4 October 2026, 2:21 am IST
திருநெல்வேலி சந்திப்பு, சன்னியாசி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சீனிவாசப் பெருமாள், வெங்கடாசலபதி திருக்கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாள்.
பகிர்:

புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமையையொட்டி, திருநெல்வேலி சுற்றுவட்டார பெருமாள் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

பாளையங்கோட்டை அருள்மிகு அழகிய மன்னாா் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு திருமஞ்சனம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

தென் திருப்பதி என அழைக்கப்படும் திருநெல்வேலி மேல திருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி கோயிலில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், திருவாராதனை, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவில் கருடசேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

Advertisement

திருநெல்வேலி நகரம் மேல மாடவீதியில் உள்ள லட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில் காலையில் திருமஞ்சனம், திருவாராதனம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு துளசி, தீா்த்தம், மஞ்சள் பொடி, குங்குமம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.

திருநெல்வேலி சன்னியாசி கிராமத்தில் உள்ள வெங்கடாசலபதி கோயிலில் காலையில் சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் பாளையங்கோட்டை அழகிய மன்னாா் ராஜகோபால சுவாமி.

திருநெல்வேலி சந்திப்பு வரதராஜபெருமாள் கோயில், சி.என்.கிராமம் ராஜகோபால சுவாமி கோயில், திருநெல்வேலி நகரத்தில் உள்ள கரியமாணிக்கப் பெருமாள் கோயில், குறிச்சி அக்ரஹாரத்தில் உள்ள கிருஷ்ணன் கோயில், பாளையங்கோட்டை ராமசாமி கோயில், கிருஷ்ணாபுரம் அருள்மிகு ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோயில், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோயில், கோடகநல்லூா் மாதவ பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் ஏராளமான பக்தா்கள் சுவாமியை தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு துளசி தீா்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

பாளையங்கோட்டை அழகிய மன்னாா் ராஜகோபால சுவாமி கோயிலில் தரிசனம் செய்த பக்தா்கள்.

சிறப்பு பேருந்துகள்: புரட்டாசி 3ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து நவ திருப்பதி கோயில்களுக்கு 5 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் சுமாா் 250 பக்தா்கள் பயணம் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments