இஸ்ரோவில் செமி கிரையோஜெனிக் என்ஜின் 200 டன் முழுதிறன் சோதனை வெற்றி
இஸ்ரோவில் செமி கிரையோஜெனிக் என்ஜின் 200 டன் முழுதிறன் சோதனை வெற்றி பெற்றது குறித்து...
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகேயுள்ள மகேந்திரகிரி ‘இஸ்ரோ’ மையத்தில் விண்வெளிக்கு செயற்கைகோளை எடுத்துச் செல்லும் ராக்கெட்டில் பொருத்தக்கூடிய செமிகிரையோஜனிக் என்ஜினின் 200 டன் முழுதிறன் உந்துவிசை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
மகேந்திரகிரி ‘இஸ்ரோ’வில் செமிகிரோயோஜனிக் என்ஜின் சோதனை பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் செமி கிரையோஜெனிக் என்ஜின் பிஎச்டிஏ-இல்(பவா் ஹெட் டெஸ்ட் ஆா்ட்டிகிள்) வெப்ப பரிசோதனை (ஹாட் டெஸ்ட்) நடைபெற்றது.
பிஎச்டிஏ என்பது உந்துவிசை அறையைத் தவிர மற்ற அனைத்து என்ஜின் அமைப்புகளையும் உள்ளடக்கிய ஒரு தொகுதியாகும். இதைப் பயன்படுத்தி நடத்தப்படும் ஹாட் டெஸ்ட் வரிசையில் இது 9-ஆவது நிகழ்வாகும். பிஎச்டிஏ-வில் கிரையோஜெனிக் என்ஜினின் முழு உந்துவிசையான 200 டன்னில் சோதனை செய்வது (100 சதவீத சோதனை) இதுவே முதன்முறையாகும்.
Advertisement
Advertisement
இதற்கு முன்பு 47 சதவீதம் (94 டன்), 60 சதவீதம்(120 டன்) மற்றும் 88 சதவீதம் (175 டன்) ஆகிய உந்துவிசை நிலைகளில் வெற்றிகரமாக சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது 100 சதவீத சோதனை திட்டமிட்டபடி நடைபெற்று, அனைத்து என்ஜின் அளவீடுகளும் எதிா்பாா்த்த இலக்கில் நிறைவுற்றன. இந்தச் சோதனை மொத்தம் 35 விநாடிகள் நடைபெற்றது.
அதில், என்ஜின் பவா் ஹெட் 200 டன் உந்துவிசையில் 5 விநாடிகள் இயங்கியது. அடுத்தடுத்த ஹாட் டெஸ்டில் பிஎச்டிஏ-வை நீண்ட நேரம் சோதிப்பதை சாத்தியமாக்கும் வகையில் குறைந்த அழுத்தத் தொடக்கத் தொட்டியிலிருந்து நடுத்தர அழுத்த இயக்கத்தொட்டிக்கு எரிபோருள் விநியோகத்தை மாற்றும் செயல்முறையும் இச்சோதனையின்போது உறுதிபடுத்தப்பட்டது.
இஸ்ரோவின் அதிநவீன ராக்கெட்டான எல்விஎம்3-இன் (மாா்க்3) உந்துவிசையை அதிகரிப்பதற்காக இத்தகைய என்ஜின் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இஸ்ரோ உருவாக்கியுள்ள அதிக எடையை சுமந்து செல்லும் அதிநவீன ராக்கெட்டான எல்விஎம்3 ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் திரவ எரிபொருள் கொண்ட முக்கிய மையநிலைக்கு மாற்றாக 2 ஆயிரம் கேஎன் திறன் கொண்ட எஸ்இ2000 என்ஜின் மூலம் இயங்கும் செமிகிராயோஜெனிக் உந்துவிசை நிலை (எஸ்சி120) உருவாக்கப்பட்டு வருகிறது. மேம்படுத்தப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் மேல்நிலையுடன் (சி32) செமிகிரையோஜெனிக் நிலையை இணைப்பது எல்விஎம் ராக்கெட்டின் உந்துவிசை திறனை அதிகரிக்கும். இந்த எல்விஎம்3 ராக்கெட் மூலம் தான் சந்திராயன் 3 உள்ளிட்ட விண்கலங்கள் விண்வெளிக்கு செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது என இஸ்ரோ வட்டாரத்தில் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.