வெள்ளப் பாதிப்பு: 5 இடங்களில் நிவாரண முகாம்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை, வெள்ளப் பாதிப்பு காரணமாக 5 இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை, வெள்ளப் பாதிப்பு காரணமாக 5 இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மூ.வடநேரே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
குமரி மாவட்டத்தில் அணைநீர் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அகஸ்தீசுவரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு ஆகிய 4 வட்டங்களில் 200 குடும்பங்கள் தங்கள் சொந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒவ்வொரு குழுவிலும் 10 அதிகாரிகள் கொண்ட 5 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 5 இடங்களில் அரசின் வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 49 ஆண்கள், 83 பெண்கள், 42 குழந்தைகள் உள்பட 92 குடும்பங்களைச் சேர்ந்த 174 பேர் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாலவிளை கிராமத்தில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தீயணைப்புத் துறையை சேர்ந்த 40 வீரர்கள் மழை மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் 140 தீயணைப்பு துறையினர் மாவட்டம் முழுவதும் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் கனமழையால் 6 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன. 55 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன. பலத்த மழை காரணமாக சுதந்திர தின விழா கலைநிகழ்ச்சிகள் புதன்கிழமை ரத்து செய்யப்பட்டன என்றார் அவர்.
21 மின்கம்பங்கள் சேதம்: மாவட்ட தீயணைப்பு - மீட்புப் பணித் துறை அதிகாரி சத்யகுமார் கூறியது:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொல்லங்கோடு, மங்காடு, குழித்துறை உள்ளிட்ட இடங்களில் 60-க்கும் மேற்பட்ட மக்கள்தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டுள்ளனர். முன்சிறை பகுதியில் பாலம் உடைந்ததால் பாதிக்கப்பட்ட 12 பேரையும் மீட்டுள்ளனர். படகுகள் மற்றும் மற்ற மீட்புபணிக்கு தேவையான பொருள்கள் பற்றாக்குறையாக இருந்தாலும் மாவட்டத்தில் உள்ள சூழ்நிலையைச் சமாளிக்க முடியும். விளவங்கோடு வட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட படகுகள், மாவட்டம் முழுவதும் சுமார் 24 மரங்கள், 21 மின்கம்பங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.