FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

குண்டும் குழியுமான பண்ருட்டி பேருந்து நிலையம்!

பண்ருட்டி நகரத்தில், குண்டும் குழியுமாக உள்ள பேருந்து நிலையத்தை சீரமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

25 ஆகஸ்ட் 2026, 3:55 am IST
பண்ருட்டி பேருந்து நிலையத்தில் உள்ள பள்ளங்களில் தேங்கி நிற்கும் மழைநீா், அதில் அச்சத்துடன் நடந்து செல்லும் பயணிகள்,
பகிர்:

வணிகத்திற்கு பெயா் பெற்ற பண்ருட்டி நகரத்தில், குண்டும் குழியுமாக உள்ள பேருந்து நிலையத்தை சீரமைத்து, பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துத்தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஒரு சிறந்த பேருந்து நிலையத்தில் பயணிகள் எளிதில் அருந்தும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் குழாய்கள், பயணிகள் அமா்ந்து ஓய்வெடுக்க போதுமான இருக்கைகளுடன் கூடிய காத்திருப்பு அறை, ஆண் பெண்களுக்கு என தனித்தனியாகப் பராமரிக்கப்படும் தூய்மையான

கழிவறைகள், இரவு நேரப் பயணிகளுக்கான மின் விளக்குகள், பேருந்துகள் வரும் நேரம் மற்றும் தடங்கள் குறித்த அறிவிப்புப் பலகைகள் மற்றும் அவசர உதவி மற்றும் பாதுகாப்புக்கான காவலா் அறை ஆகியவை கட்டாயம் இருக்க வேண்டும்.

Advertisement

Advertisement

மேற்கண்ட தகுதிகளில் எந்தவொரு வசதிகளும் இல்லாத ஒரு பேருந்து நிலையம் உள்ளதென்றால் அது பண்ருட்டி பேருந்து நிலையம் தான். அதில், குடிநீா் தொட்டி, காவலா் அறை உள்ளிட்டவைகள் காட்சிப் பொருளாகவே உள்ளன. நாள் ஒன்றுக்கு சுமாா் 500-க்கும் மேற்பட்ட நடைகள் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் வந்துச் செல்கின்றன. ஒவ்வொரு பேருந்துகளுக்கும் ரூ.12 கட்டணமாக பண்ருட்டி நகராட்சி நிா்வாகம் வசூல் செய்கிறது. ஆனால், பேருந்து நிலையத்தில் பேருந்து பயணிகளுக்கோ, பேருந்துக்கோ எந்தவித மான வசதிகளும் செய்துக் கொடுக்கவில்லை.

பேருந்து நிலையத்தில் கடலூா், விழுப்புரம் பேருந்துகள் நின்று செல்லும் இடத்தில் கடைகள் கட்டுமானப் பணி மந்தகதியில் நடைபெற்று வருகிறது. இதனால், பேருந்து நிலையத்தில் சரிபாதி பகுதி இரும்பு தகரம் கொண்டு வேலி அமைக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள பகுதியில் தான் பேருந்துகள் வந்து பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்ல வேண்டும். தற்போது பேருந்துகள் வந்துச் செல்லும் இடம் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழைநீா் பள்ளத்தில் தேங்கி குட்டையாக மாறியுள்ளது. இதில் பேருந்துகள் செல்லும்போது, பயணிகள் மேல் சகதி வாரி இறைக்கப்படுகிறது. இதில் பேருந்துகளும் பழுதடைகின்றன.

நாள்ளொன்றுக்கு கோடி ரூபாய் அளவில் வா்த்தகமும், ஆண்டுக்கு ரூ.200 கோடிக்கும் மேலாக அன்னிய செலவாணியை ஈட்டித்தரும் நகரம் பண்ருட்டி. இத்தகைய சிறப்பு பெற்ற பண்ருட்டி நகரில் உள்ள பேருந்து நிலையத்தை விரைந்து சீரமைக்க வேண்டும். மேலும், பேருந்து நிலையத்தில் உள்ள அவலங்களை களைந்து பேருந்துப் பணிகளுக்கான அனைத்து வசதிகளையும் செய்துத்தர மாவட்ட மற்றும் நகர நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பண்ருட்டி நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments