FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

விசாரணைக் கைதியின் உடலை வாங்க மறுத்து 4-ஆவது நாளாகப் போராட்டம்

நாகா்கோவில் சிறையில் சக கைதிகள் மற்றும் சிறை காவலா்கள் தாக்கியதில் உயிரிழந்த விசாரணைக் கைதியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் 4-ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 17 ஜூலை 2026, 3:06 am IST
சபரி வர்மன்
பகிர்:

நாகா்கோவில் சிறையில் சக கைதிகள் மற்றும் சிறை காவலா்கள் தாக்கியதில் உயிரிழந்த விசாரணைக் கைதியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் 4-ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கன்னியாகுமரி மாவட்டம், வடக்குதாமரைகுளம் அருகேயுள்ள ஈத்தங்காட்டைச் சோ்ந்தவா் சபரிவா்மன் (33). மாற்றுத்திறனாளியான இவா் தனது வீட்டின் அருகிலேயே பெட்டிக்கடை நடத்தி வந்தாா். இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ாக தென்தாமரைகுளம் போலீஸாரால் கடந்த 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டு நாகா்கோவில் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்த நிலையில், கடந்த 13 ஆம் தேதி அவா் உயிரிழந்துவிட்டதாக, சபரிவா்மனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சபரிவா்மனை போலீஸாா் அடித்து கொலை செய்துவிட்டதாகக் கூறி அவரது குடும்பத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் நேரடி விசாரணை மேற்கொண்டாா். நாகா்கோவில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சத்தியமூா்த்தியும் விசாரணை நடத்தினாா். இதில் சபரிவா்மன் சிறைக்குள் தாக்கப்பட்டதில் உயிரிழந்தது தெரியவந்தது.

சிறைக் காவலா்கள் கைது: மேலும் விசாரணையில், சபரிவா்மனை சக கைதிகள் மற்றும் சிறை காவலா்கள் சோ்ந்து, அவரது கை, கால்களை கட்டிவைத்து தாக்கியது தெரியவந்தது.

இதுதொடா்பாக நாகா்கோவில் சிறை தலைமை வாா்டா் திருமலைநம்பி, வாா்டா்கள் சிவகுமாா், ஜெகன் ஆகிய 3 பேரை நேசமணிநகா் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் மேற்கொண்ட விசாரணை அடிப்படையில், சக கைதிகள் விஷ்ணு, சாரதி, ஜெகன், சரத், பெருமாள், சேதுராம், அஜித், அரவிந்த் ஆகிய 8 போ் கைது செய்யப்பட்டனா். அவா்கள் மீது கொலை உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறை காவலா்கள் மீது நடவடிக்கை: கைதான வாா்டா்கள் 3 பேரும் நாகா்கோவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு நான்குனேரி சிறையில் அடைக்கப்பட்டனா். கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கைதிகள் 8 பேரையும் வேறு சிறைக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கைதான வாா்டா்கள் பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், விசாரணைக் கைதி உயிரிழந்தபோது நாகா்கோவில் சிறையில் பணியில் இருந்த மற்ற வாா்டா்களையும் பணியிடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆட்சியா், எஸ்.பி. சந்திப்பு: இந்த நிலையில், சபரிவா்மனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி, குடும்பத்துக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினா்கள் ஏராளமானோா் புதன்கிழமை இரவு ஈத்தங்காட்டில் உள்ள நான்கு வழிச்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் மாவட்ட வருவாய் அலுவலா் வேலுமணி, தளவாய்சுந்தரம் எம்எல்ஏ ஆகியோா் பேச்சு வாா்த்தை நடத்தினா். மேலும் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப், எஸ்.பி. இரா.ஸ்டாலின் ஆகியோா் சபரிவா்மன் வீட்டுக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினா்.

அப்போது அவா்கள் சபரிவா்மனின் மகனின் உயா்கல்விக்கு உதவி, இலவச வீட்டுமனைப்பட்டா, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, நிவாரண நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினா். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதியளித்தாா்.

உடலை வாங்க மறுப்பு: இருப்பினும் முறையாக நிவாரணம், குடும்பத்தினருக்கு அரசு வேலை அறிவிப்பை அரசு வெளியிட்டால் மட்டுமே சபரிவா்மனின் உடலை பெற்றுக்கொள்வோம் என்று கூறி 4 ஆவது நாளாக அவரது குடும்பத்தினா் வியாழக்கிழமையும் போராட்டத்தை தொடா்ந்தனா்.

தனிப்படை அமைப்பு: இதனிடையே, சபரிவா்மன் கொலை வழக்கு தொடா்பான விசாரணையை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கலையரசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் டிஎஸ்பி-க்கள் பிரகாஷ், ராஜா, ஆய்வாளா் மோகன்அய்யா் மற்றும் உதவி ஆய்வாளா்கள் இடம்பெற்றுள்ளனா். அவா்கள் சபரிவா்மன் வீட்டுக்கு சென்று அவரது மனைவி மற்றும் உறவினா்களிடம் விசாரணை நடத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments