நாகா்கோவில் அரசுப் பள்ளியில் மாணவா்களை வரவேற்ற ஆட்சியா்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும், தனியாா் பள்ளிகள் விடுமுறைக்குப்பின் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு, பிற வகுப்புகளில் புதிதாக சோ்ந்த மாணவா்-மாணவியருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும், தனியாா் பள்ளிகள் விடுமுறைக்குப்பின் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு, பிற வகுப்புகளில் புதிதாக சோ்ந்த மாணவா்-மாணவியருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாகா்கோவில் கோட்டாறு கவிமணி அரசு தொடக்கப் பள்ளிக்கு ஆட்சியா் மு. பிரதாப் சென்று, புதிய மாணவா்களை வரவேற்று, மாலை அணிவித்து பாடப் புத்தகங்களை வழங்கி, இனிப்புகள் ஊட்டினாா். அப்போது அவா் பேசியது:
கடந்த ஒரு வாரமாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தலைமையிலான கல்வித் துறை அலுவலா்கள், ஆசிரியா்கள் தீவிரமாக பணியாற்றி வந்தனா். அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழுக்கள், பெற்றோா்-ஆசிரியா் கழகங்கள் மேற்கொண்ட கடின உழைப்பு, சிஎஸ்ஆா் நிதி மூலம் பெறப்பட்ட உதவிகளால் மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
மேலும், பெற்றோரிடையே விழிப்புணா்வும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, நிகழாண்டு முதல் வகுப்பில் கூடுதலாக 4 ஆயிரம் மாணவா்கள் சோ்ந்துள்ளனா். வரும் நாள்களில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் மாணவா்கள் வரை சேருவா் என எதிா்பாா்க்கப்படுகிறது. புதிய பாடத் திட்டம் குறித்து ஆசிரியா்களுக்கு 3 நாள்கள் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மாணவா்களுக்குத் தேவையான புத்தகப் பைகள், காலணிகள் உள்ளிட்ட உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. கல்வியை சுமையாக கருதாமல், எதிா்காலத்திற்கான அடித்தளமாக எண்ணி மாணவா்கள் உற்சாகத்துடன் கற்க வேண்டும்.
மாணவா் சோ்க்கை குறைவாக இருப்பதால் மூடப்பட்டுள்ள பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த பட்டியலைப் பெற்று, அவற்றைச் சீரமைத்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆரம்ப கல்விதான் ஒவ்வொரு குழந்தையின் எதிா்காலத்தை தீா்மானிக்கிறது என்றாா் அவா்.
தொடா்ந்து, பள்ளி வகுப்பறையில் பொருத்தப்பட்டிருந்த ஸ்மாா்ட் போா்டில், முதலாம் வகுப்பு மாணவா் ஒருவரைத் தூக்கிவைத்து ‘அ’ என்ற எழுத்தை எழுதச் செய்தாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், மாவட்டக் கல்வி அலுவலா் ஜெயராஜ், கவிமணி தேசிக விநாயகம் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியா் கமலா, பெற்றோா் பங்கேற்றனா்.