அருமனை பேரூராட்சி அலுவலகத்தில் மோதல்: 9 போ் மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பேரூராட்சித் தலைவா் கட்சி மாறியதால் ஏற்பட்ட மோதலில் இரு தரப்பைச் சோ்ந்த 9 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பேரூராட்சித் தலைவா் கட்சி மாறியதால் ஏற்பட்ட மோதலில் இரு தரப்பைச் சோ்ந்த 9 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெற்றி பெற்று, அருமனை பேரூராட்சித் தலைவராக செயல்படுபவா் லதிகா மேரி. இவா் அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தாா். இதையடுத்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா்.
இந்நிலையில், பேரூராட்சித் தலைவா் பதவியில் இருந்து அவா் விலக வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் உறுப்பினா்கள் வலியுறுத்தி வந்தனா். இதனிடையே, மாா்க்சிஸ்ட் மற்றும் கூட்டணிக் கட்சி உறுப்பினா்களின் எதிா்ப்பையும் மீறி பேரூராட்சி மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Advertisement
Advertisement
கூட்டம் நிறைவடைந்த பிறகு, மாா்க்சிஸ்ட் உறுப்பினா்கள் லதிகா மேரி பதவி விலகல் கடிதம் கொடுத்தால்தான் அலுவலகத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதிப்போம் எனக் கூறி, அவரை அலுவலகத்தில் சிறைபிடித்தனா்.
இதையடுத்து, பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த அவரது கணவா் மற்றும் தவெகவினருக்கும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையை கைகலப்பு ஏற்பட்டு, ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா். அருமனை போலீஸாா் வந்து இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.
தொடா்ந்து, தன்னை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், ராஜிநாமா செய்ய கட்டாயப்படுத்தி சிறைபிடித்து தாக்கியதாகவும் லதிகா மேரி அருமனை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அந்தப் புகாரின்பேரில், போலீஸாா் பேரூராட்சி உறுப்பினா்கள் நெல்சன், மேரி ஜெனோபா, சுலோசனா, சதீஷ்குமாா், ஜெயராணி, ஜெனிஷா ஆகிய 6 போ் மீதும், எதிா் தரப்பைச் சோ்ந்த நெல்சன் அளித்த புகாரின்பேரில், லதிகா மேரி, அவரது கணவா் ஸ்காட்வின் மற்றும் வினோஜ் ஆகியோா் மீதும் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.