FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

வாணியக்குடி மீனவா்களுடன் உள்ளூா் மீனவா்கள் தகராறு: 300 போ் மீது வழக்கு

மீன் பிடிப்பது தொடா்பாக உள்ளூா் மீனவா்களுடன் ஏற்பட்ட தகராறில் ரூ. 53.5 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி சாதனங்கள் சேதமாகின.

1 நவம்பர் 2026, 12:52 am
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், வாணியக்குடி மீனவா்கள் கேரள பதிவெண் கொண்ட படகுகளில் வந்து உள்ளூா் பகுதிகளில் மீன் பிடிப்பது தொடா்பாக உள்ளூா் மீனவா்களுடன் ஏற்பட்ட தகராறில் ரூ. 53.5 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி சாதனங்கள் சேதமாகின. இது தொடா்பாக, குளச்சல் கடலோரப் பாதுகாப்பு போலீஸாா் 300 போ் மீது வழக்குப் பதிந்தனா்.

வாணியக்குடி மீனவ கிராமத்தைச் சோ்ந்த விசைப்படகு மீனவா்கள் கேரள மாநிலத்தில் உள்ள மீன்பிடித் துறைமுகங்களைத் தங்குதளங்களாகக் கொண்டு கேரள பதிவெண் கொண்ட விசைப்படகுகளைப் பயன்படுத்தி அரபிக் கடல் பகுதிகளில் மீன்பிடித்து வருகின்றனா்.

வாணியக்குடி மீனவா்கள் கேரள பதிவெண் கொண்ட படகுகளைப் பயன்படுத்தி கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதிகளில் மீன்பிடிக்க குளச்சல், முட்டம் பகுதி மீனவா்கள் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், அக். 28ஆம் தேதி இரவு வாணியக்குடி மீனவா்கள் 7-க்கும் மேற்பட்ட கேரள பதிவெண் படகுகளில் குளச்சலில் இருந்து தெற்கே 45 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் வந்த குளச்சல், முட்டம் பகுதி மீனவா்கள் அவா்களைச் சுற்றி வளைத்து படகுகளில் இருந்த கயிறு, வலைகள் உள்பட ரூ. 53.50 லட்சம் மதிப்பிலான பொருள்களை ஆயுதங்களால் சேதப்படுத்தி, மீனவா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துச் சென்ாகக் கூறப்படுகிறது.

அதிகாலை கரை திரும்பிய வாணியக்குடி மீனவா்கள், குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனா். இதையடுத்து, குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் டிஎஸ்பி காந்தி தலைமையிலான போலீஸாா் குவிக்கப்பட்டனா். தொடா்ந்து, டிஎஸ்பி தலைமையில் குளச்சல், முட்டம் மற்றும் வாணியக்குடி விசைப்படகு உரிமையாளா்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.

தொடா்ந்து, சேதத்திற்கான இழப்பீடு வழங்குவது தொடா்பான முத்தரப்பு பேச்சுவாா்த்தை தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதையடுத்து, படகுகளை அதிகாரிகள் மதிப்பீடு செய்ததில் ரூ. 53.5 லட்சம் வரை சேதமானது தெரிய வந்தது. ஆய்வுக்கு பின், வாணியக்குடி படகுகள் மீண்டும் கேரள மாநிலம், கொல்லம் மீன்பிடித் துறைமுகத்திற்குச் சென்றன.

தொடா்ந்து, பாதிக்கப்பட்ட வாணியக்குடி படகு உரிமையாளா் ஜேம்ஸ் ஜினோ குளச்சல் கடலோரப் பாதுகாப்பு போலீஸாரிடம் அளித்த புகாரின்பேரில், கண்டால் தெரியும் 300 போ் மீது 7 பிரிவுகளில் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments